கார்த்தி கேட்டது நியாயமானது தான்! நாளைக்கே அதிகாரிகளோடு கலந்துபேசுகிறேன்! அசர வைத்த முதலமைச்சர்!
சிவகங்கை: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முன் வைத்த கோரிக்கை ஒன்றுக்கு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆன் தி ஸ்பாட்டில் உறுதியளித்து அசர வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சிக் கல்லூரியை சிவகங்கையில் தொடங்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கை மிக மிக நியாயமானது என ஏற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இதனிடையே இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

சிவகங்கை சீமை
''இந்தியாவின் விடுதலைக்காகப் போராடுவதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்த மண்தான், இந்த சிவகங்கை சீமை! வீரத்துக்கு - மருது சகோதரர்கள்! கவிதைக்கு - கவியரசு கண்ணதாசன்!இறையியலுக்கு - தவத்திரு குன்றக்குடி அடிகளார்!என்று இந்த தமிழினத்துக்கு பெருமதிப்புக்குரியவர்களை வாரி வழங்கிய மண், இந்த மண்!''

சுறுசுறுப்பு -வேகம்
''ஐந்து ஆண்டுகளில் செய்யவேண்டியதை இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். இது ஏதோ ஆரம்ப கட்ட வேகம் என்று நீங்கள் நினைக்கலாம் -எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இதே சுறுசுறுப்புடனும், இதே வேகத்துடனும் தான் நான் இருப்பேன். மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும் தான் என்னை இத்தகைய சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் பணியாற்ற வைக்கிறது.''

கார்த்தி சிதம்பரம்
''இங்கே கூட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்கள், நாங்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து விட்டீர்கள், இப்போது ஒரு கோரிக்கை வைக்கிறேன், அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்றார். யாரிடத்தில் சொன்னால் அது நடக்கும் என்று தெரிந்து நீங்களும் சொல்கிறீர்கள்.''

பெண் காவல் பயிற்சிக் கல்லூரி
''வீரமங்கை வேலு நாச்சியாரை போற்றும் வகையில் சிவகங்கை நகரை தலைமையிடமாகக் கொண்டு, வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் காவல் பயிற்சிக் கல்லூரி துவங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். நியாயமான கோரிக்கை. ஆனால் நான் சென்னைக்கு இன்று இரவு செல்கிறேன். நாளையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்துபேசி, ஆய்வு நடத்தி, அதைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications