நடிகர்கள் அரசியலுக்கு வராதது அவர்களுக்கு தான் நல்லது! புத்திமதி கூறும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.!
சிவகங்கை: முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வராதது அவர்களுக்கும் நல்லது அரசியலுக்கும் நல்லது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார்.
நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் ராகுலை சந்தித்து உரையாடிய நிலையில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. இந்தக் கருத்தை பதிவு செய்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் இல்லாத கூட்டணி விஷப்பரீட்சையை போன்றது என்றும் தமிழகத்தில் அந்த விஷப்பரீட்சைக்கு யார் தயாராக இருக்கிறார்கள் என்று தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை பொறுத்தவரை செய்தியாளர்கள் சந்திப்பின் போது மனதில் தோன்றிய கருத்தை மறைக்காமல் பேசக்கூடியவர். அந்த வகையில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வராதது அவர்களுக்கும் நல்லது அரசியலுக்கும் நல்லது என புதிய அறிவுரை ஒன்றை இப்போது வழங்கியுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் இவ்வாறு தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் கூட்டணி
நடிகர்களின் அரசியல் வருகை குறித்து இவ்வாறு பேசிய கார்த்தி சிதம்பரம் திமுகவையும் மறைமுகமாக வம்புக்கு இழுக்கும் வகையில் பேசினார். காங்கிரஸ் இல்லாத கூட்டணி விஷப்பரீட்சையை போன்றது என்றும் தமிழகத்தில் அந்த விஷப்பரீட்சைக்கு யார் தயாராக இருக்கிறார்கள் என்று தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வரும் சூழலில் அவர் ஏன் இந்தக் கருத்தை கூற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

நம்பகமான கூட்டணி
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அது தான் பாஜகவுக்கு எதிரான நம்பக கூட்டணி என தமிழ்நாடு மக்கள் எண்ணுவதாக ஒரே போடு போட்டார். சட்டசபையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததில் தவறேதும் இல்லை என்றும் ஆளுநர் ஏன் அரசாங்கள் தயாரித்தஉரையை மாற்றிப் படிக்க வேண்டும் எனவும் கார்த்தி சிதம்பரம் வினவினார். தமிழக சட்டசபையில் ஆளுநர் தான் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார்.

கடன் கொடுப்பதில்லை
காங்கிரஸ் ஆட்சியின் போது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு அதிகம் கடன் வழங்கப்பட்டதாகவும் ஆனால் பாஜக அரசு வந்தபிறகு கடன் கொடுக்கப்படுவதில்லை எனவும் சாடினார். இதனால் இந்திய தொழில்துறை சரிசமமற்ற நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.












Click it and Unblock the Notifications