"தமிழ், தமிழ் என்று முழங்குவோர் வீடுகளில் கூட... தமிழில் பூஜைகள் நடப்பதில்லை!" மதுரை ஆதீனம் ஆதங்கம்
சிவகங்கை: திருப்புத்துாரில் தமிழ் வேத ஆகம பயிற்சி கூட்டத்தில் தமிழ் அர்ச்சனை குறித்து மதுரை ஆதீனம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் தமிழ் வேத ஆகம பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், தமிழில் அர்ச்சை செய்வது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை
இந்த தமிழ் வேத ஆகம பயிற்சி நிகழ்ச்சியில் துலாவூர் ஆதினம், பாடசாலை நிர்வாகி சத்யபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் ஒரு கூட்டம் கூறுகிறது.. அதே நேரம் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று மற்றொரு தரப்பினர் கூறுகிறது எனக் குறிப்பிட்டார்.

மதுரை ஆதீனம்
பெண்களுக்குக் கூந்தலில் இயற்கையாகவே மணம் உள்ளதா என்று பாண்டிய மன்னருக்கு ஒரு முறை சந்தேகம் ஏற்பட்டதாகத் தெரிவித்த மதுரை ஆதீனம், அப்போது அந்த சந்தேகத்தைத் தீர்க்க சிவபெருமானே தமிழ்ப் புலவராகக் காட்சி அளித்தார் என்றும் அவர் கூறினார்.

யாரும் தடுக்கக் கூடாது
மேலும் சமஸ்கிருதம், தமிழ் என எதில் வேண்டுமானாலும் கடவுளுக்குப் பூஜைகள் செய்யலாம். அதில் தவறு எதுவும் இல்லை என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். ஒவ்வொரு கோயில்களிலும் சமஸ்கிருதம், தமிழ் என அந்தந்த மொழிகளில் பூஜை செய்யலாம் எனக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் தமிழில் பூஜை செய்வதை யாரும் தடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

தமிழில் பூஜை இல்லை
தொடர்ந்து பேசிய அவர், தமிழ், தமிழ் என்று கூறுபவர்களின் வீடுகளில் கூட தமிழ் மொழியில் கடவுள்களுக்குப் பூஜைகள் நடப்பதில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்தார். மேலும், மொழி உணர்வைப் போற்றி பாதுகாக்கும் அதே நேரத்தில், இங்குள்ள அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும் என்றும் பெண்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழில் அர்ச்சனை
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாகவே மாநிலத்திலிருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக, 47 பெரிய கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு. அதில் தமிழில் அர்ச்சனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications