பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ விசாரணை.. இளையான்குடியில் பரபரப்பு.. பின்னணி!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமியர்களின் அமைப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு பல்வேறு சிறிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பால் திரும்பி பார்க்கக் கூடிய அமைப்பாக வளர்ந்துள்ளது. இந்த அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு, இஸ்லாமியர் தனிநபர் சட்ட நீதிமன்றம், இஸ்லாமிய மக்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான வேலைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா
இதனால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், செயல்பாட்டாளர்கள், பேச்சாளர்கள் குறி வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இளையான்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கையில் என்ஐஏ விசாரணை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள கலிபா தெருவைச் சேர்ந்தவர் முகமது ரோஸ்லான். இவர் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பேச்சாளராக இருந்து வருகிறார். இந்த சூழலில் நேற்று காலை தேசிய புலனாய்வு அதிகாரி பிகாஸ் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் இளையாங்குடி போலீசார் முகமது ரோஸ்லான் வீட்டிற்கு விசாரணைக்கு வந்தனர்.

குடும்பத்தினரிடம் விசாரணை
ஆனால் ரோஸ்லான் வீட்டில் இல்லை. இதுகுறித்து குடும்பத்தினரிடம் கேட்கையில், முகமது ரோஸ்லான் 4 மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வீட்டில் உள்ள உறவினரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீட்டின் முன் குவிந்து கோஷம் எழுப்பினர். இதனால் இளையான்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோஷமிட்டவர்கள் மீது வழக்கு
முகமது ரோஸ்லான் மீது மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணையை முடித்து கொண்டு தேசிய புலனாய்வு போலீசார் புறப்பட்டு சென்றனர். இதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தேவையின்றி கூட்டம் கூடியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது இளையான்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications