நிகிதா சும்மா இருக்க மாட்டாங்க போலயே! புதுசா யார் இது ரம்யா? பேட்டியில் சொன்ன ஷாக் தகவல்.. குழப்புதே
சென்னை: மதுரை காவலாளி அஜித் குமார் மரணம் குறித்து புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டி அளித்த நிகிதா, புதிதாக ரம்யா என்ற பெண்ணின் பெயரை குறிப்பிட்டுள்ளார். ரம்யா என்ற பெண்ணின் பெயரை குறிப்பிட்டு நிகிதா பேசி உள்ள விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிகிதா அளித்த பேட்டியில், நான் அங்கே இருக்கும் போது ஒரு லேடி வந்தாங்க.. ரம்யாவோ.. யாரோ என்று நினைக்கிறேன். அங்கே பூக்கடை வச்சு இருக்காங்க போல. என் ஆளு எங்கே என்று கேட்டாங்க. அவங்கதான் அஜித்தின் பொண்டாட்டி என்று நினைத்தேன். ஆனால் இல்லை என்று பிறர் என்னிடம் சொன்னார்கள். அந்த பெண் விளையாடுவதாக சொன்னார்கள்.

அந்த ரம்யா மட்டும்தான் உள்ளே போய் அஜித்தை பார்த்தார். உள்ளே போய் பார்த்துவிட்டு வந்து.. அஜித் எதுவும் சொல்லவில்லைமா.. இதுவே அவனுக்கு வேலையா போச்சு.. உங்களுக்கு டீ வாங்கிக்கொண்டு வரட்டுமா என்று என்னிடம் அந்த பெண் கேட்டார்.. சதீஷ் கூட எனக்கு டீ அவ்வப்போது வாங்கிக்கொடுத்துகொண்டுதான் இருந்தார், என்று நிகிதா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அஜித் குமார் மரணம் அடைந்துவிட்ட நிலையில், சம்பந்தமே இல்லாமல் ரம்யா என்ற பெண்ணின் பெயரை குறிப்பிட்டு நிகிதா பேசுவது பல கேள்விகளை, விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
மோசடி ராணி நிகிதா
போலீஸ் விசாரணையில், இளைஞர் அஜித் குமார் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நிகிதா மீது அடுத்தடுத்து மோசடி புகார்கள் வந்துள்ளன.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை நிகிதா பலரிடம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், மோசடி செய்த பணத்துடன் தலைமறைவாகிவிடும் பழக்கம் நிகிதாவுக்கு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. திருமங்கலத்தில் பிடிபட்டபோது, பணம் கேட்டவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். "நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பீர்களா? உங்களைக் கொலை செய்துவிடுவேன்" என்று அவர் மிரட்டியதாக அவர்கள் கூறுகின்றனர்.
பழைய புகார்கள்
நிகிதா மீது 2011ஆம் ஆண்டு திருமங்கலத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது அவரது குடும்பத்தினர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், அவர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அல்லாப்பட்டியில் உள்ள தனது சொந்த வீட்டை ஒரு கல்லூரி நிர்வாக இயக்குனருக்கு விற்பதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளார். மேலும், ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது நிலுவையில் உள்ளன.
திட்டமிட்ட நாடகமா?
நிகிதா இதுவரை சுமார் ரூ.65 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் அணிந்திருக்கும் நகைகள் கூட மோசடி பணத்தில் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நகைகள் திருடு போனதாக நாடகமாடி நிகிதா பணம் பறிக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இது குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications