வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த முயற்சி.. தேவகோட்டை அரசு பள்ளிக்கு புத்தகங்களை பரிசளித்த ஆர்டிஓ
சிவகங்கை: வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளிக்கு ரூ.5000 மதிப்பிலான புத்தகங்களை வருவாய் கோட்டாட்சியர் வழங்கியுள்ள சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
வாசிப்பு என்பது தற்போதைய காலத்தில் பள்ளியுடன் முடிந்துவிடுகிறது. பள்ளியில் இருக்கும் புத்தகங்களை வாசிப்பதில் ஏற்படும் சலிப்பு வாழ்க்கை முழுவதும் தொற்றிக்கொள்கிறது. எனவேதான் வாசிப்பதில் யாரும் அதிகமாக ஆர்வம் காட்டுவது கிடையாது. இந்த நிலையை மாற்ற அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி பாடங்களை எளிமைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இது மாணவர்களிடையே வாசிப்பு குறித்த ஆர்வத்தை தூண்ட உதவும்.

அதேபோல நூலகங்களின் செயல்பாடுகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது. அதாவது பள்ளி பாட புத்தகங்களை கடந்து, மற்ற புத்தகங்களையும் வாசிக்க வைக்கும் பழக்கத்தை நூலகங்கள் நிச்சயம் அதிகரிக்கும். இயற்கை, நீதி கதைகள், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் புத்தகங்களை பள்ளி நூலகங்களில் அதிகமாக பார்க்க முடிகிறது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வருவாய் கோட்டாட்சியர் வழங்கியுள்ளார். கோட்டாட்சியரின் இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதாவது தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் ரூபாய் 5,000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார். தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பேசுகையில்,
"தமிழ் வழி கல்வியில் படிக்கும்போது பொது அறிவு அதிகமாக வளரும். நூலக புத்தகங்களை வாசிக்கும்போது நமக்கு பரந்துபட்ட அறிவு வளரும்.நம்மால் பலரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகங்கள் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் நமது வாழ்க்கையை செம்மையாக்கலாம் . இந்த பள்ளியில் மாணவர்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றது. வாழ்த்துகள்" என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பாக புத்தகம் வாசித்து கருத்துக்களை கூறிய மாணவர்கள் அஜய், கனிஷ்கா, தீபா, முகல்யா, யோகேஸ்வரன் ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications