சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் செப்.11 விடுமுறை.. ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்
சிவகங்கை: தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவருமான சுதந்திரப் போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு நாள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.09.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
மேலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நாளுக்கு பதிலாக வரும் 23ஆம் தேதி அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இயங்கும். இமானுவேல் சேகரனின் நினைவு தின நிகழ்வில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பார்வையாளர்களின் நலன் கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம் வரும் 11ஆம் தேதி இயங்காது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அனுசரிக்கப்படுவதை ஒட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவோருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டார்.
அதில், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோரின் வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படாது, சொந்த வாகனங்களில் வருவோர் முன்கூட்டியே காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து அனுமதி பெற வேண்டும், வாகனத்தில் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது, அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பு தலைவர்களுக்கு 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களில் சாத, மத உணர்வை தூண்டும் வாசகங்கள் மற்றும் பதாகைகள் இடம்பெற்றிருக்கக் கூடாது, சாதி பெயருக்கான முழக்கங்கள் எழுப்ப கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வரும் 10, மற்றும் 11 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இமானுவேல் சேகரின் நினைவு நாள் முன்னெச்சரிக்கையாக அருகில் இருக்கும் சிவகங்கை மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்தும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications