144 போட்டாச்சு..இன்று முதல் சிவகங்கை மாவட்டத்தில் 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு..பலத்த போலீஸ் காவல்
சிவகங்கை: மருதுபாண்டியர்களின் குருபூஜையொட்டி, சிவகங்கை முழுவதும் இன்று முதல் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை பகுதியை ஆண்ட அரசி வேலுநாச்சியாரின் படை தளபதிகளாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள் மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள் ஆவர்.

இவர்கள், 1758 முதல் 1801ம் ஆண்டு வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர்.. இறுதியில், 1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்... பின்னர், 3 நாட்கள் கழித்து இவர்களது உடல்களை இவர்கள் கட்டிய காளையார் கோவிலுக்கு எதிர்புறமாக அடக்கம் செய்யப்பட்டது.
தலைவர்கள்: அந்தவகையில், வருடந்தோறும், அக்டோபர் 27--ம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் மணி மண்டபத்திற்கு வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
கலெக்டர் அறிவிப்பு: அந்த அறிவிப்பில், "விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா அக்டோபர் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
அசம்பாவிதங்கள்: அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையிலும் அக்டோபர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்திருந்தார்.
அதன்படியே, இன்று 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.. இதற்காக சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications