சிவகங்கையே சிலிர்த்துருச்சு.. புதிய மசூதிக்கு இந்து, கிறிஸ்துவர்கள் சீர்வரிசை! வியந்த முஸ்லிம்கள்
சிவகங்கை: சாலைகிராமம் என்ற பகுதியில் மசூதி திறப்பு விழாவுக்கு இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் சீர்வரிசையோடு சென்று வாழ்த்தி பேனர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சாதி, மத ரீதியிலான வெறுப்பு பேச்சுக்களும் மத ரீதியிலான தாக்குதல்களும், குற்றங்களும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கலவரங்களும் இந்தியாவில் தொடர்ந்து பெருகி வருகின்றன. மனிதர்களை மாட்டுக்காக அடித்துக் கொல்லும் குற்றங்கள், பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி நடக்கும் கும்பல் படுகொலைகள் வட மாநிலங்களை ரத்தக் களறியாக்கி வருகின்றன. உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற மத ரீதியிலான குற்றங்கள் பெருகி உள்ளன.

தென் மாநிலமான கர்நாடகா வரை இத்தகைய கொடூர குற்றங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ்நாடு மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவே இருந்து வருகிறது. இங்கும் சில பகுதிகளில் சாதி, மத பிரச்சனைகள் இருந்தாலும் பிற மாநிலங்களை இங்கு ஒப்பீட்டு அளவில் குறைவுதான். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு மதங்களை பின்பற்றி வந்தாலும் பெரும்பாலானோர் அந்த பாகுபாடு பார்க்காமலேயே நட்போடு பழகி வருகிறார்கள்.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போன்ற போரிடர்களின்போது சாதி மதம் பார்க்காமல் ஏராளமான இஸ்லாமிய அமைப்புகள் நீரில் இறங்கி நிவாரண பணிகளை செய்தார்கள். சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் அனைத்து மதத்தினர் தங்குவதற்காக மசூதிகள் திறக்கப்பட்டன. அங்கேயே அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது.
அதேபோல் ஒரு மதத்தினர் மற்றொரு மத நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், பண்டிகைகளில் பங்கெடுத்துக்கொள்வது, உதவி செய்வது, வாழ்த்துக்களை பரிமாறுவது என மத நல்லிணக்கம் தமிழ்நாட்டில் தலைத்தோங்குகிறது. இஸ்லாமியர்கள் கோயில் நிகழ்வுகளுக்கு வரும் இந்துக்களுக்கு தண்ணீர், குளிர்பானம் தருவது, இந்துக்கள் மசூதி திறப்பு விழாவிற்கு வருபவர்களை வாழ்த்தி வரவேற்பது என தினமும் செய்திகள் வெளியாகி நெகிழ்ச்சியடைய வைக்கின்றன. இத்தனைய சம்பவம்தான் சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பகுதியில் நடந்து உள்ளது.

"மஸ்ஜிதே இலாஹி" என்ற பெயரில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக மசூதி ஒன்றை கட்டி முடித்து இருக்கின்றனர். இதன் திறப்பு விழா நடைபெற்று இருக்கிறது. பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து சாலைக்கிராமம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் பேனர் வைத்து இஸ்லாமியர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
"புதிய இறை இல்லத் திறப்பு விழா சிறக்க வாழ்த்துகிறோம்." என்று குறிப்பிட்டு ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கமும், "எங்கள் உறவுகளின் புதிய இறையில்லத் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்." என்று குறிப்பிட்டு சாலைக் கிராமம் புனித சகாய அன்னை ஆலயத்திற்கு உட்பட்ட கத்தோலிக்க கிறித்தவ இறைமக்கள் மற்றும் இளையோர் அமைப்பினரும் வாழ்த்து பேனர் வைத்தனர். இத்துடன் நிற்காமல் பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் திரளாக கலந்துகொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications