நடுரோட்டில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர்.. தேவகோட்டையே ஆடிபோச்சு.. ஷாக் காரணம்
சிவகங்கை: இருசக்கர வாகனத்தில் வந்த மனைவி மீது தனது பைக்கால் அதிவேகமாக மோதி கீழே தள்ளி அவரை நடுரோட்டில் வைத்து கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்தார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்துள்ளது
சிவகங்கை மாவட்டம் கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த 41 வயதாகும் பிரபாகரன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சூரியா (30). இவர்களுக்கு பிரகதி என்ற 5 வயது மகள் உள்ளார். பிரபாகரனின் மனைவி சூரியா தனது மகளுடன் தேவகோட்டை சரசுவதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் வசித்து வந்தார். தேவகோட்டையில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் சூரியா வேலை பார்த்தும் வந்தார்.

பிரபாகரன் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தான் சிங்கப்பூரில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தார். பிரபாகரன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தனது சொந்த ஊரான கடம்பாகுடியில் இருக்க விரும்பி இருக்கிறார். அதன்படி தனது மனைவி சூரியாவை கடம்பாகுடிக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால் சூரியா செல்ல மறுத்துவிட்டாராம்.
சொந்த ஊருக்கு வர மனைவி விரும்பாத காரணத்தால் பிரபாகரன் தகராறு செய்துள்ளார். இதனிடையே கணவனுடன் சேர்ந்து வாழ சூரியா மறுத்துவிட்டாராம். இதனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக உறவினர்கள் சமரசம் செய்ய முயற்சித்தார்கள். ஆனாலும் திட்டவட்டமாக சூரியா , தனது கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டாராம்
போலீஸ் ஸ்டேசனில் அப்போது பேசிய சூரியா, கணவர் பிரபாகரன் அடிக்கடி தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார், அதனால் அவருடன் வாழ விருப்பம் இ்ல்லை என்று கூறியிருக்கிறாராம். இதனால் மனைவி மீது பிரபாகரன் கடும் ஆத்திரம் அடைந்தார். இப்படி மனைவி கூறியதால், அவரது நடத்தை மீதும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக சரஸ்வதி வாசக சாலை பகுதியில் சூரியா ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்து பிரபாகரன் தயாராக இருந்துள்ளார். மனைவி வந்ததும், தனது மோட்டார் சைக்கிளால் மனைவியின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதினார். இதில் நிலை தடுமாறி சூர்யா கீழே விழுந்து அலறி உள்ளார்.
அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், தான் கொண்டு வந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். பின்னர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். நடுரோட்டில் நடந்த இந்த பயங்கர கொலையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் பதறி ஓடினார்கள்.
இந்தநிலையில், பிரபாகரன் தேவகோட்டை காவல் நிலையத்துக்கு சென்று, மனைவியை கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications