அஜித் குமாரை காப்பாற்ற முடியவில்லையே! என் உயிருக்கு அச்சுறுத்தல்! வீடியோ எடுத்த நண்பர் பரபரப்பு
சிவகங்கை: திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், காவல் நிலைய சம்பவத்தை வீடியோ எடுத்த சத்தீஸ்வரன், தன்னால் அஜித்தைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனை இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தனக்கும், அஜித் குமாரின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சத்தீஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "அஜித் குமாரைப் போலீஸார் அடித்தது தொடர்பான வீடியோ எடுத்தது நான்தான். சம்பவம் நடந்தபோது என்ன நடந்தது என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டோம். இந்த விவகாரத்தில் நீதிபதி சுந்தர்லால் விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, சிலர் 'நாங்கள்தான் அஜித் குமாரை அடித்து போலீஸில் ஒப்படைத்தோம்' என எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.

அப்படியென்றால், அந்த வீடியோவை நான் ஏன் எடுக்கப் போகிறேன்? கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாமல் என்னை இதுபோல் பேசுகிறார்கள். உண்மை எப்படியும் வெளியே வரும். என்னை அவ்வாறு அவதூறு பரப்புபவர்களுக்கு இப்படி நடந்திருந்தாலும் நான் வீடியோ எடுத்து அவர்களுக்காகப் போராடியிருப்பேன்.
இரு நாட்களாக நான் மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என நீதிபதி ஏற்கெனவே சொல்லிவிட்டார். எனக்குப் பிரச்சினை இல்லை, என் உயிர் போனாலும் கவலையில்லை. நான் தைரியமாகச் சாட்சி சொல்ல முன்வந்ததும் மேலும் சிலர் சாட்சி சொல்ல வந்தார்கள். அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.
காவலர் ராஜாவின் மொபைல் போனை வாங்கி ஆய்வு செய்ய வேண்டும் எனக் காவல் துறைக்கு இந்தப் பேட்டி மூலமாக நான் அழுத்தம் கொடுக்கிறேன். நீதிபதியிடமும் நான் சொல்லப் போகிறேன். என்னை யாரும் நேரடியாக மிரட்டவில்லை. எனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் 'பார்த்து நடந்துக்க சொல்லுங்கள்' எனச் சொல்லியிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட நவீன்குமாரின் (அஜித் குமாரின் சகோதரர்) குடும்பத்திற்குப் பாதுகாப்பு வேண்டும். நீதி வழங்கக்கூடிய தெய்வமாக மடப்புரம் காளியம்மன் இருக்கிறார். அப்படிப்பட்ட கோயிலிலேயே அநியாயமாக ஒரு விஷயம் நடந்துள்ளது என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அஜித் குமாரைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கு இன்று வரை இருக்கிறது. நான் பின்வாசல் வழியாக நின்று 30 விநாடிகள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கம் யாரோ வருவதை அறிந்த நான், வீடியோவை அணைத்துவிட்டு வந்துவிட்டேன்." இவ்வாறு அந்த இளைஞர் தெரிவித்தார்.
வழக்கு பின்னணி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் 27 வயது இளைஞர் அஜித் குமார் என்பவர் காவலாளியாக உள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி அந்தக் கோயிலுக்கு வயதான தாயுடன் நிகிதா என்பவர் வந்திருந்தார். அவருடைய தாய்க்கு, அஜித் குமார் வீல்சேர் கொண்டு வந்து கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தனது காரை அஜித் குமாரைவிட்டு ஓரமாக நிறுத்தச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, கோயிலுக்குள் சென்றுவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்ற நிகிதா, பாதி வழியில்தான் நகைகளைக் காணவில்லை எனத் தெரியவந்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, கோயில் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் அஜித் குமாரைப் போலீஸில் ஒப்படைத்ததாகவும் அந்தப் பெண் கூறியிருந்தார். இந்த நிலையில், விசாரணைக்காக அஜித் குமாரைத் தனிப்படைப் போலீஸார் கடுமையாகத் தாக்கியதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications