Sivakasi: சொந்தக்காரங்க வந்து எதாவது சொல்லுவாங்க.. காதல் திருமணம் ரொம்ப கஷ்டம்! கலகலப்பாக பேசிய உதயநிதி
விருதுநகர்: காதல் திருமணம் எல்லாரும் ஈஸி என நினைக்கிறாங்க.. அது தான் கடினமானது என சிவகாசி மேயர் வீட்டு இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசினார். மேலும் காதல் திருமணம் செய்துகொண்டுள்ள மணமக்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களும் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் மேயராக இருப்பவர் சங்கீதா. இவரது இல்ல திருமண விழாவிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது மணமக்களை வாழ்த்திய உதயநிதி மணமக்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறினார்.

கலகலப்புடன் பேசிய உதயநிதி
ஏனென்றால் இங்கு வந்தபோது தான் தெரிந்தது. மணமக்களுக்கு காதல் திருமணம் என்று.. எனவே தான் ஸ்பெஷல் வாழ்த்து கூறினேன் என்றும் பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்வதை விட காதல் திருமணம் செய்வது தான் கடினம் என்றும் அவர் கூறினார். திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சென்னை உள்பட வட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இருந்த போதிலும் இந்த திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். ஸ்பெஷல் வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால் மணமக்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்துள்ளனராம்.
காதல் திருமணம் தான் கடினம்
இதற்காக தான் ஸ்பெஷல் வாழ்த்து கூறினேன். ஏனென்றால் இப்போது காதல் திருமணம் செய்வது தான் கடினமாக உள்ளது. பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்து திருமணம் செய்து வைப்பது சிறப்பான நிகழ்வு தான். ஆனால் காதல் திருமணம் அதைவிட கடினம் ஆகும். எல்லாருமே நினைப்பார்கள் காதல் திருமணம் தான் எளிது என்று.
சொந்தக்காரங்க வருவாங்க..
அப்படி கிடையாது. காதல் திருமணம் தான் கடினமானது. ஏனென்றால் முதலில் காதலை இருவரும் சொல்ல வேண்டும். பின்னர் ஒருவருக்கு ஒருவர் காதலை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு பிறகு இரு வீட்டு குடும்பத்தினரையும் சம்மதிக்க வைக்க வேண்டும். இனி எல்லாம் முடிந்தது என்று நினைத்தால், பின்னர் சொந்தக்காரர்கள் வருவார்கள். எதையாவது சொல்வார்கள்.
பல்வேறு இடங்களில் இருந்து பிரச்சினை வரும். காதல் திருமணம் செய்ய தடை போட நினைப்பார்கள். ஆனால் இதையெல்லாம் சமாளித்து தான் காதல் திருமணம் செய்ய முடியும். மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசும்போது திருமண நிகழ்ச்சியானது கலகலப்பு உண்டானது. உதயநிதி ஸ்டாலினும், அவரது மனைவி கிருத்திகாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications