கஞ்சிக்கே வழியில்லை! நான் 23 லட்சம் கடன் வாங்கியிருக்கேனா? வங்கி நோட்டீஸால் சிவகாசி இளைஞர் அதிர்ச்சி
சிவகாசி: சிவகாசியில் உள்ள யுபிஐ வங்கி பக்கமே நான் போனதில்லை, ஆனால் நான் 23 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் வாங்கியதாக நோட்டீஸ் வந்ததாக இளைஞர் ஒருவர் அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார்.
சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த பட்டாசு தொழிலாளர்களான ராமு- முத்துலட்சுமி தம்பதியினர் மகன் செல்வம் (33). இவருக்கும் விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த மாரியப்பன்- பாண்டியம்மாள் தம்பதியின் மகள் பீலாவுக்கும் திருமணமானது.

இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மாரியப்பன் கட்டட தொழிலாளியாக உள்ளார். பாண்டியம்மாள் ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பீலா, விருதுநகர் அரசு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார்.
இந்த நிலையில் செல்வம் கடந்த சில ஆண்டுகளாக விருதுநகர் அல்லம்பட்டியில் தனது மாமனார் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி மாரியப்பனுடன் கட்டட வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் சிவகாசி பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள யுபிஐ வங்கியில் செல்வன் 4 கடன் தொகைகளாக நகையை அடமானம் வைத்து ரூ 23 லட்சம் ரொக்கம் பெற்றதாக நோட்டீஸ் வந்துள்ளது.
அதுவும் போலி நகையை அடமானம் வைத்து செல்வம் பணம் பெற்றதாகவும் அந்த பணத்தை உடனே செலுத்த வேண்டும் என்றும் வங்கி சார்பில் செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் செல்வமும் அவருடைய குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது வங்கி பக்கமே வராத தங்கள் குடும்பத்தினர் எப்படி இவ்வளவு நகைகளை வைத்து நகைக் கடன் வாங்கியிருக்க முடியும்? அதிலும் 25 பவுன் போலி நகைகளை வைத்ததாக கூறுகிறார்கள் என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்கள். மேலும் அவர்கள் கூறுகையில் " நாங்களே அன்றாடம் கூலியை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களிடம் ஏது தங்க நகை?
போலியான நகையை வைத்து நாங்கள் அதிக அளவில் பணம் வாங்கியதாக சொல்லப்படுவது தவறு. எனவே காவல் துறை இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இதே வங்கியில் ரூ.7.56 கோடிக்கு 56 பேரின் பெயரில் 126 நகைக் கடன் எண்களில் போலியான தங்க நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்ததாக தூத்துக்குடி மாவட்டம் சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம், யுபிஐ வங்கியின் சிவகாசி கிளையின் நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோர் மீது சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் சிவகாசி பேருந்து நிலையத்தின் பின்புறம் காந்தி சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த புகார் நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications