இந்திய சினிமாக்களில் தென் இந்திய படங்களின் ஆதிக்கம்...கண்விழிக்குமா பாலிவுட் உலகம்?
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய திரையுலகமான பாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு தென் இந்திய மொழிப்படங்கள் ஆதிக்கம் வளர்ந்துள்ளது. இனியாவது பாலிவுட் கண் விழிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பான் இந்தியா படங்கள்
பான் இந்தியா படங்களின் வருகை காரணமாக கொரோனாவுக்கு பின் பாலிவுட் உலகை தென் இந்திய படங்கள் ஆக்கிரமித்துள்ளன. வலுவான கதை அமைப்பு, தேர்ந்த இயக்கம் மூலம் இந்தி ரசிகர்களை ஆட்கொண்டுள்ளனர். இனியாவது இந்தி திரையுலகம் விழிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பாலிவுட் உலகம்
இந்திய திரையுலகில் பாலிவுட் திரையுலகம் மிகப்பெரியது. இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டுள்ளது. ராஜ்கபூர் தொடங்கி அமிதாப் வரை இந்தியா முழுவதும், அதையும் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் உண்டு. இசையமைப்பாளர், பாடகர்கள் என பாலிவுட் ஆட்களுக்கு எப்போதும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

தென் இந்திய திரைப்பட உலகம்
அதையடுத்து மிகப்பெரிய அளவில் சினிமா இண்டஸ்ட்ரி என எடுத்தால் தென் இந்திய திரைப்படங்கள் தான். முன்னர் கோலிவுட் என தமிழ், தெலுங்கு, கன்னடப்படங்கள் ஒரே இடத்தில் சென்னையில் எடுக்கப்பட்டது. பின்னர் கோல்வுட் டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் ஆக பிரிந்தது. சமீப காலமாக திரையுலக வியாபாரம் விரிவடைந்து வருகிறது. பான் இந்தியா, பான் இண்டர்நேஷனல் அளவுக்கு விரிவடைந்துள்ளது.

ஆதிக்கம் செலுத்திய தென் இந்தியர்கள்
ரஜினி, கமல், வெங்கடேஷ் பாபு,சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, தொடங்கி பல கலைஞர்கள் இந்திய அளவில் பிரபலமானார்கள். இயக்குநர்கள் மணி ரத்னம், கே.விஸ்வநாத், ஷங்கர், ராம்கோபால் வர்மா உள்ளிட்டோர் முதலில் இந்திய அளவில் பான் இந்திய மூவிக்களை கொடுத்தனர். நடிகர் கமல்ஹாசனுன் இதில் முன்னோடி.

முன்னுக்கு வந்த இளம் தலைமுறையினர்
அடுத்தடுத்த தலைமுறையினர் இதில் முன்னிலும் வேகமாக கால்பதித்தனர். மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. நல்ல கதை, படத்தை எடுக்கும் விதம், தொழில் நுட்பம், நல்ல கலைஞர்கள் மூலம் எடுக்கப்படும் பிரம்மாண்ட படங்கள் இந்தியா முழுவதும் முத்திரைப்பதித்தது. பாலிவுட் முன்னணி நடிகர்கள் படவசூலை விட அதிகம் வாரி குவித்தது.

கொரோனாவுக்கு பிந்தைய நிலை
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு பாலிவுட் படங்களுக்கு இணையாக அதையும் முறியடிக்கும் வகையில் வந்த புஷ்பா இந்தியில் வசூலை வாரி குவித்தது. இது தெலுங்கில் எடுக்கப்பட்ட படம், அதற்கு முன் பாகுபலி, பாகுபலி 2 மூலம் ராஜமவுலி கால் பதித்திருந்தார். அதற்கும் முன் எந்திரன், 2.0 மூலம் ஷங்கர் கால் பதித்து வசூலை வாரி குவித்திருந்தார். அதே அளவுக்கு பாலிவுட் படங்கள் எதையும் சாதிக்கவில்லை என்பதே உண்மை.

வசூலில் கால் பதிக்கும் தென் இந்தியர்கள்
பாலிவுட்டில் இந்தியா முழுவதும் மக்களால் பேசப்பட்ட ஷாருக்கான் படங்கள், சல்மான் கான் படங்கள், லகான், டங்கல், சக்தேவ் உள்ளிட்ட படங்களை எடுத்த ஜாம்பவான்கள் உள்ளனர். ஆனால் சமீபத்தில் கொரோனாவுக்கு பின் வந்த வரவுகள் என்றால் 83 படம் தவிர வேறு எதையும் சொல்ல முடியவில்லை. ஓடிடி தளத்தில் சில படங்கள் வந்துள்ளன.ஆனால் வசூலை வாரி குவிக்கும் படங்களை தென் இந்தியர்களே எடுக்கின்றனர்.

புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப்-2 படங்களின் ஆதிக்கம்
சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா தி ரைஸ் இந்தியா முழுவதும் ரூ. 108.26 கோடி வசூலித்தது. பின்னர் வெளியான எஸ்எஸ் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியது. இது இந்தியாவில் ரூ 240.79 கோடி வசூலித்தது. தற்போது, KGF 2 பாக்ஸ் ஆபிஸில் தனது பயணத்தை உச்சத்தில் தொடங்கியுள்ளது. இது அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாஸ் காட்டும் தென் இந்திய திரைப்படங்கள்
கொரோனா லாக்டவுனுக்கு பின் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் இயங்கும் பிராந்திய திரைப்படங்களின் மாஸ் அதிகரித்து வருகிறது. தென்னிந்தியத் திரைப்படங்கள் தங்கள் மாநில சந்தைகளை மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து படங்களும் ஹிந்தி பெல்ட்டிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்தி பெல்ட்டில் ஆதிக்கம்
இந்தியாவில் இயங்கும் பிராந்திய மொழி திரைப்படங்களின் இந்த போக்கு மேலும் தங்களது மார்க்கெட்டை இந்தி பெல்ட்டிலும் விரிவடைவதில் வெற்றி பெற்றுள்ளன. விஜய்யின் பீஸ்ட் மற்றும் யாஷின் KGF-2 ஆகியவை வெளியிடப்பட்டதால் சமீபத்திய எந்த பாலிவுட் திரைப்படத்தையும் விட அதிகமான பாலிவுட் ரசிகர்கள் இந்தப்படங்களை நோக்கி நகர்வது நடக்கிறது.

தென் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த முடியாத பாலிவுட்
இந்தி திரையுலகின் முன்னனி நடிகர்கள் சல்மான் கான் உள்ளிட்டோர் இதே அளவுக்கு தென் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை. வடக்கில் உள்ள ரசிகர்கள் தென் மாநில திரைப்பட தயாரிப்பாளர்களின் கதை சொல்லும் பாணியை அதிகம் விரும்புகின்றனர். அதனால் தென் இந்திய படங்களை நோக்கி பாலிவுட் ரசிகர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

தென் இந்திய படங்கள் வெற்றிக்கு இதுதான் காரணமா?
தென்னிந்திய பட உலகினர் பாலிவுட்டில் வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள் நாங்கள் கதை சொல்லும் விதம், எங்கள் சினிமாவை நன்கு அறிந்திருக்கிறார்கள், இது ஒரே இரவில் நடக்கவில்லை. அது சில வருடங்களாக தொடர்ந்து இறுதியில், அவர்கள் உள்ளடக்கம், கதைக்களம் மற்றும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு பாகுபலி, எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ் உள்ளிட்டோர் நேரடியாக களத்தில் இறங்கினர், தற்போது கேஜிஎஃப்-2 வரை அது விரிவடைந்துள்ளது என்கிறார் தென் இந்திய பட உலகைச் சேர்ந்த நடிகர் ஒருவர்.

பாலிவுட்டில் இருந்த ஜாம்பவான்கள் எங்கே?
பாலிவுட் உலகில் அற்புதமான படங்களை கொடுத்த இயக்குநர்கள் கதாசிரியர்கள் இன்றும் உள்ளனர். பாந்த்ரா முதல் வெர்சோவா கூட்டத்தை தாண்டி இந்தி படங்களில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இந்தியாவின் மற்ற பகுதிகளின் நிலை என்ன? முழுமையான பொழுதுபோக்குக்கு ஏங்குபவர்களுக்கு என்ன கிடைக்கும்? பாலிவுட் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. சரியான கதையும் உணர்வும் இருந்தால் பெரிய படங்களை ஏற்றுக் கொள்ளும் மக்கள் நாட்டில் உள்ளனர் என்று பிரபல சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் இதுபற்றி எச்சரித்துள்ளார்.

விழித்துக்கொள்ளுமா பாலிவுட் உலகம்?
சூர்யவன்ஷி, டைகர் ஜிந்தா ஹை, பஜ்ரங்கி பாய்ஜான், டங்கள் போன்ற மெகா பிளாக்பாஸ்டர் படங்களை கொடுத்த இந்தி இயக்குநர்களுக்கு நாடு முழுவதும் உள்ள ஆடியன்ஸுக்கான சினிமாவை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என்கிறார் சினிமா விமர்சகர் அக்ஷய் ரதி. ஆகவே பாலிவுட் உலகம் வழக்கமான பாணியை விட்டு விலகி ரசிகர்களுக்கு தேவை என்ன என்பதை உணர்ந்து அதில் பயணித்தால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என்பதே உண்மை.