"எங்க வீட்டுல படுக்க கூட இடம் இருக்காது.." கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்ற கீர்த்தனா நெகிழ்ச்சி
சென்னை: மாலத்தீவு நாட்டில் நடந்த கேரம் உலகக் கோப்பை போட்டியில் வென்ற கீர்த்தனா நேற்றிரவு சென்னைக்குத் திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. இதற்கிடையே தனது குடும்பம் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தனக்கு அரசு வேலையும் வீடு கட்டவும் தமிழக அரசு உதவ வேண்டும் என கீர்த்தனா கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலத்தீவு நாட்டில் 7வது உலகக் கோப்பை கேரம் போட்டி நடைபெற்றது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் இந்தப் போட்டிகள் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற அணியில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா, காசிமா மற்றும் மித்ரா ஆகிய மூன்று வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர். இத்தொடரின் இறுதிப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது.

கேரம் தொடர்
கடந்தாண்டை போலவே இந்தாண்டும் இந்திய அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாகத் தமிழக வீராங்கனை கீர்த்தனா, சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா, மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் என்று இரண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் கீர்த்தனா. அதேபோல் டீம் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றது. இதன் மூலம் கீர்த்தனா 3 தங்கப் பதக்கத்தை வென்றார்.
உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த பிறகு கீர்த்தனா உள்ளிட்ட கேரம் வீரர்கள் தாயகம் திரும்பினர். நேற்றிரவு சென்னை வந்திறங்கிய கீர்த்தனா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கேரம் தொடரில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கீர்த்தனா
காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனா, தனது குடும்பம் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தனக்கு அரசு வேலையும் வீடு கட்டவும் தமிழக அரசு உதவ வேண்டும் என கீர்த்தனா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சன் நியூஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனது அம்மா சின்ன வயதில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.. நகையை எல்லாம் அடகு வைத்து போட்டியில் விளையாடப் பணம் கொடுத்துள்ளார்.
ரொம்ப கஷ்டம்
அதையெல்லாம் நான் நேரிலே பார்த்துள்ளேன். மகளுக்காகத் தருகிறோம் என்பதால் துளியும் யோசனை இல்லாமல் நகையை வைத்து பணம் கொடுப்பார். அதைப் பார்க்கும்போது நமக்குத் தான் கண்கள் கலங்கும். வெற்றியோ.. தோல்வியோ.. மகள் ஆசைப்படுகிறாள் என்ற ஒரே காரணத்திற்காகக் கொடுப்பார். மற்ற வீடுகளில் பணம் இல்லை என்றால் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், எனது வீட்டில் பணம் இல்லை என்றாலும் தொடர்ந்து சப்போர்ட்டாக நின்றார்கள். அவர்கள் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டுவிட்டார்கள். இனிமேல் அவர்களை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
கோரிக்கை
அவர் இதுவரை தனக்கு என எதுவுமே கேட்டதில்லை. நமது வீட்டில் இனி கஷ்டம் இருக்கக்கூடாது.. நிலைமை மாற வேண்டும் என மட்டுமே சொன்னார். எனக்காக வீட்டில் அனைவரும் கஷ்டப்பட்டனர்.. இந்த வெற்றி அந்த நிலைமை மாற்றும் என நம்புகிறேன். எங்கள் வீட்டில் படுக்கக்கூட இடம் இருக்காது. இப்போது நான் பெற்று வந்த கோப்பையை வைக்கக் கூட இடமிருக்காது. இதனால் தான் நான் வாங்கிய பாதி கப்கள் கேரம் கிளப்பில் தான் இருக்கும். எங்கள் வீட்டில் வசதி இல்லை. எனவே, எனக்கு அரசு வேலையும், சொந்தமாக வீடு கட்டவும் உதவுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications