மணப்பெண்ணாக மனைவி! 7 மாதத்தில் பாகிஸ்தான் பவுலர் ஷாகின் அப்ரிடி 2வது முறையாக திருமணம்! என்னாச்சி?
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் மகளை திருமணம் செய்தார். இந்நிலையில் தான் ஆசியக்கோப்பை கிரிக்கெட் முடிந்த பிறகு 2வது முறையாக ஷாகின் அப்ரிடி திருமணம் செய்து கொள்ள உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளராக இருப்பவர் ஷாகின் அப்ரிடி. 6.6 அடி உயரம் கொண்ட இவருக்கு வயது வெறும் 23 தான். தனது உயரத்துக்கு ஏற்ப அதிவேகத்தில் பந்து வீசி எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை கபளிகரம் செய்து வருகிறார்.

தற்போதைய சூழலில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இவர் உள்ளார். தற்போது ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த அணியின் ஷாகின் அப்ரிடி இடம்பிடித்துள்ளார். ஆசியக்கோப்பையில் இதுவரை அவர் 4 போட்டிகளில் விளையாடி மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
இன்றைய தினம் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோத உள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் துருப்புச்சீட்டாக ஷாகின் அப்ரிடி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஓவர்களில் இலங்கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது ஷாகின் அப்ரிடி 2வது முறையாக திருமணம் செய்ய உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணம் என்பது ஆசியக்கோப்பை கிரிக்கெட் முடிந்த பிறகு நடக்க உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி ஷாகின் அப்ரிடி முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷாகித் அப்ரிடியின் மகள் அன்சா அப்ரிடியை திருமணம் செய்து கொண்டார். இத்தகைய நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 2வது திருமணம் என்றால் நீங்கள் ஷாக் ஆக வேண்டாம். ஏனென்றால் ஷாகின் அப்ரிடி தனது மனைவி அன்சாவை தான் 2வது முறையாக திருமணம் செய்ய உள்ளார். அதாவது கடந்த பிப்ரவரி மாதம் நடந்த திருமணத்தில் ஷாகின் அப்ரிடி மற்றும் ஷாகித் அப்ரிடியின் குடும்பத்தினர், அதோடு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்த திருமணம் என்பது அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்தது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஷதாப் கான் உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்றனர். இத்தகைய சூழலில் தான் திருமணத்தை வெகுவிமரிசையாக நடத்த இருவரின் குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இதில் மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமின்றி மற்றவர்களை அழைக்க உள்ளனர். இதற்காக தான் இந்த 2வது திருமணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த 2வது நாளான வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் வைத்து ஷாகின் அப்ரிடி தனது மனைவி அன்சாவை 2வது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications