பாகிஸ்தானில் "ஜன கன மன".. அதிர்ந்து போன ஆஸ்திரேலியா வீரர்கள்.. பதறிய டிஜே.. லாகூரில் நடந்தது என்ன?
லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டத்திற்கு முன் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்திற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் தவறுதலாக ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக டிஜே தேசிய கீதத்தை நிறுத்தினார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்று விளையாட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 3 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 4வது லீக் போட்டியில் பரம எதிரிகளான ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் 20 நிமிடங்களில் விளையாடுவதற்கு தயாரான வீரர்கள் உடனடியாக மைதானத்திற்குள் வந்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணிகளின் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். அந்த வகையில் முதல் இங்கிலாந்து அணியின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதன்பின் ஆஸ்திரேலியா அணியின் தேசிய கீதத்திற்கு அந்த அணி வீரர்கள் தயாராகினர். ஆனால் திடீரென டிஜே, இந்தியாவின் தேசிய கீதத்தை ஒலிக்கவிட்டார்.
"ஜன கன மன" என்று தொடங்கும் தேசிய கீதத்தில் "பாரத பாக்ய விதாதா" என்ற வார்த்தைகள் ஒலித்தது. 3 நொடிகளில் இந்திய தேசிய கீதம் உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதன்பின் உடனடியாக ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதன்பின் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இந்தியாவில் ட்ரெண்டாகி வருகிறது. பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட விளையாட திட்டமிடப்படவில்லை. இருந்தாலும் எப்படி தேசித கீதம் தவறுதலாக போடப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications