சாம் கரண் வேண்டாம்.. அந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டரை கொண்டு வாங்க.. சிஎஸ்கே வெற்றியை தடுக்க முடியாது!
சென்னை: ஐபிஎல் தொடரில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்து இன்றுமுதல் 2வது சுற்று போட்டிகள் தொடங்குகிறது. இதில் சிஎஸ்கே அணி தங்களின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை அணியின் வெற்றி தொடருமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கு சிஎஸ்கே அணியின் மோசமான பேட்டிங் வரிசையே காரணம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
18வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் மற்ற அணிகளின் பேட்டிங் வரிசையை ஒப்பிடும் போது, சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை சாதாரணமாகவே இருக்கிறது. ஐதராபாத், ராஜஸ்தான், டெல்லி, லக்னோ, ஆர்சிபி உள்ளிட்ட அணிகளின் பேட்டிங் வரிசையை ஒப்பிட்டால், சிஎஸ்கே அணியின் சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரச்சின் ரவீந்திரா ஆகிய மூவரால் மட்டுமே சூழலுக்கு ஏற்ப அதிரடியாக ரன்களை குவிக்க முடியும். மற்ற பேட்ஸ்மேன்களான ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, சாம் கரண், ஜடேஜா உள்ளிட்டோர் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடக் கூடிய பேட்ஸ்மேன்களாக மட்டுமே இருக்கிறார்கள். இவர்களால் 170 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் ஐதராபாத், டெல்லி, அகமதாபாத், மும்பை, முல்லம்பூர் உள்ளிட்ட மைதானங்களில் குறைந்தபட்சம் 220 ரன்கள் குவிக்கப்படும். அதனை சேஸிங் செய்வதற்கு நிச்சயமாக 170 முதல் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்ஸ்மேன்கள் ஆட வேண்டிய கட்டாயம் நிச்சயம் வரும் போட்டிகளில் எழும். இதனால் சிஎஸ்கே அணியில் அதிரடி வீரர்களை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஜேமி ஓவர்டனை சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் ஐபிஎல் மெகா ஏலத்திலேயே ஜேமி ஓவர்டனை வாங்குவதற்காக சிஎஸ்கே நிர்வாகிகள் தனியாக சில கோடிகளை ஒதுக்கி வைத்தனர். இதன் காரணமாகவே ஷர்துல் தாக்கூரை கூட சிஎஸ்கே அணியால் வாங்க முடியவில்லை.
ஏனென்றால் இமாலய சிக்சர்களை அடிக்க கூடியவரான ஜேமி ஓவர்டன், 15 பந்துகளில் ஆட்டத்தையே மாற்றக் கூடியவர். அண்மையில் நடந்த பிபிஎல் தொடரில் கூட ஜேமி ஓவர்டன் பேட்டிங்கில் அசத்தி இருந்தார். இதனால் சாம் கரண் இடத்தில் ஜேமி ஓவர்டனை கொண்டு வர வேண்டும். அப்படி மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், வெளி மைதானங்களிலும் சிஎஸ்கே அணியால் வெற்றி பெற முடியும்.
அதேபோல் தீபக் ஹூடாவுக்கு பதிலாக ஷேக் ரஷீத் அல்லது விஜய் சங்கரை கூட சிஎஸ்கே அணி விளையாட வைக்கலாம் என்று இப்போதே அட்வைஸ் வரத் தொடங்கிவிட்டது. இதனால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வலிமை வாய்ந்த ஆர்சிபி அணிக்கு எதிராக எப்படியான பிளேயிங் லெவனை தேர்வு செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications