அந்த ஒரு "விதி.." தக்கவைக்க வேண்டாம் என சொல்லும் பிரபல வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு ஷாக்! என்னாச்சு
டெல்லி: ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களைத் தக்கவைக்கிறார்கள் என்பது குறித்த லிஸ்டை ஐபிஎல் அணிகள் வரும் அக். 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இதற்கிடையே இந்தாண்டு ஆர்டிஎம் விதிகளில் செய்யப்பட்டுள்ள ஒரு மாற்றம் காரணமாக வீரர்கள் பலரும் தக்கவைப்பிற்குப் பதிலாக ஏலத்திற்குச் செல்லவே ஆர்வம் காட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான கிரிக்கெட் லீக் என்றால் அது ஐபிஎல் தான். கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மெகா ஏலம்: அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், வீரர்களைத் தக்கவைப்பது குறித்த விதிகளை பிசிசிஐ சில வாரங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதன்படி ஒரு அணியால் அதிகபட்சம் 6 வீரர்களைத் தக்கவைக்க முடியும். இதற்காக அதிகபட்சம் ரூ.79 கோடியைச் செலவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், வரும் அக். மாதம் இறுதிக்குள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விதிகளின்படி அணி நிர்வாகம் 6 வீரர்களையும் நேரடியாகத் தக்கவைக்கலாம் அல்லது ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் வீரர்களை மீண்டும் எடுக்கலாம். மேலும், அணி நிர்வாகம் ஒரு வீரரைத் தக்கவைக்க விரும்பினாலும், அதற்கு எதிராக வீரர்கள் நினைத்தால் ஏலத்திற்குச் செல்ல முடியும் என்ற விதி இருக்கிறது. இந்த விதி காரணமாகப் பல வீரர்கள் மார்க்கெட்டில் தங்கள் மதிப்பு என்ன என்பதைச் சோதிக்க விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஒரு விதி: தக்கவைக்கப்படும் தொகையைக் காட்டிலும் அதிக தொகைக்கு ஏலம் போவோம் என்று நினைப்பதால் இவர்கள் ஏலத்தில் பங்கேற்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் பலரும் தக்கவைப்பிற்குப் பதிலாக ஏலத்திற்குச் செல்லவே விரும்புகிறார்களாம். சந்தையில் உள்ள மதிப்பிற்கு ஏற்ப தொகையைப் பெறவே அவர்கள் ஏலத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள். கிரிக்பஸ் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதாவது விளையாடிய அணிக்காகவே மீண்டும் ஆடுவது ஓகே என்றாலும் கூட தற்போது இருக்கும் தக்கவைப்பு ஸ்லாப்பில் உள்ள தொகைக்கு விளையாட சில வீரர்கள் விரும்பவில்லையாம். மாறாக ஏலத்திற்குச் சென்று, அதில் தங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கிறது என்பதைப் பார்க்க விரும்புகிறார்கள். தேவைப்பட்டால் விளையாடிய அணியே ஆர்டிஎம் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என்பதே வீரர்களின் கருத்தாக உள்ளதாம்.
எப்படி: ஆர்டிஎம் விதியில் புதிய மாற்றம் ஒன்று இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணமாக குல்தீப் யாதவ் (கடந்தாண்டு டெல்லிக்காக விளையாடியவர்) ஏலத்திற்கு வருகிறார் என வைத்துக் கொள்வோம். பழைய விதிகளின்படி, குல்தீப் யாதவை ராஜஸ்தான் 4 கோடிக்கு ஏலத்தில் வென்றுவிடுகிறது என்றால் அதே தொகையைக் கொடுத்து மீண்டும் டெல்லியால் வாங்கிவிட முடியும். ஆனால், புதிய விதிகளின்படி டெல்லி ஆர்டிஎம் பயன்படுத்திய பிறகு மீண்டும் ராஜஸ்தானால் ஒரு முறை தொகையை ஏற்ற முடியும். அந்த தொகை டெல்லிக்கு ஓகே என்றால் மட்டுமே ஆர்டிஎம் மூலம் அவரை எடுக்க முடியும்.
ஏலத்திற்குச் செல்லவே விருப்பம்: இந்த விதியே பல வீரர்கள், குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள், ஏலத்திற்குச் செல்ல விருப்பம் தெரிவிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. ஏற்கனவே இந்த புதிய விதியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ஹென்ரிச் கிளாசனை அதிகபட்ச தொகையான ரூ.18 கோடிக்கு பதிலாக ரூ.23 கோடிக்கு தக்கவைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர மேலும் பல வீரர்கள் சந்தையில் தங்கள் மதிப்பைச் சோதிக்க ஏலத்திற்குச் செல்ல விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications