ரிஷப் பண்ட், ஹர்திக், ராகுல்.. சீனியர்களை ஓவர்டேக் செய்த சுப்மன் கில்.. துணைக் கேப்டனானது எப்படி?
மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில் நட்சத்திர வீரர்களான முகமது சிராஜ், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தேர்வாகி இருக்கின்றனர். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், ஸ்பின்னராக குல்தீப் யாதவும், வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக் கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ள நிலையில், அவருக்கு இதுதான் கடைசி தொடராக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு பிசிசிஐ நிர்வாகத்திற்கு உள்ளது.
இந்த சூழலில் சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக நியமனம் செய்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரின் போதே சுப்மன் கில் இந்திய ஒயிட் பால் அணியின் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டவர் தான். அதற்கு ஒயிட் பால் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் அபாரமான ஆட்டம் முக்கியமாக அமைந்தது.
2023ஆம் ஆண்டுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் 59 பேட்டிங் சராசரியுடன் 1,641 ரன்களை விளாசி இருக்கிறார். ஆனால் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணி வெறும் 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறது. அதில் சுப்மன் கில் வெறும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.
அதேபோல் சமீப காலங்களில் சுப்மன் கில் இந்திய டி20 அணியில் இருந்து தனது இடத்தை இழந்துவிட்டார் என்று சொல்லலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவுக்கு வெளியில் கடந்த 3 ஆண்டுகளாக சுப்மன் கில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இப்படியொரு நிலையில் இந்திய ஒயிட் பால் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில்லை இந்திய அணி நிர்வாகம் முன்னிறுத்தி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியிலேயே அனுபவம் வாய்ந்த ஐபிஎல் கேப்டன்களான ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். அதேபோல் சீனியர் வீரரான ஜஸ்பிரிட் பும்ரா அடுத்த டெஸ்ட் பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறார். இந்த நிலையில் சுப்மன் கில்லை பிசிசிஐ நிர்வாகம் முன்னிறுத்தி இருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications