பேட்டிங், பவுலிங், பீல்டிங்.. வேற லெவல் காட்டும் ஆல்ரவுண்டர்.. இந்திய வெற்றிக்கு காரணமே அவர்தான்!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார் அக்சர் படேல். இதுவரை பேட்டிங்கில் 4 இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் மற்றும் 80 ரன்களை சேர்த்துள்ளார். சாதாரணமாக பார்க்கும் போது இதன் மதிப்பு குறைவாக இருந்தாலும், சூழலுடன் ஒப்பிடும் போது அக்சர் படேலின் பங்களிப்பு தங்கத்திற்கு ஈடாக அமைந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 265 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்த போது, விராட் கோலியின் அசாதாரண ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது.

அக்சர் படேல் சாதனை
ஆனால் விராட் கோலியை விடவும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் அக்சர் படேல்தான். ஏனென்றால் பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என்று 3 வகையிலும் இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் அக்சர் படேல் 80 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
மாற்றம் நடந்தது எங்கே?
இந்த ஸ்டாட்ஸ் சாதாரணமாக தெரிந்தாலும், ஒவ்வொரு முறையும் அக்சர் படேல் ஏற்படுத்தியுள்ள தாக்கம்தான் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் போது திடீரென நம்பர் 5 பேட்டிங் வரிசையில் அக்சர் படேல் களமிறக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு விராட் கோலிக்கு கம்பெனி கொடுத்ததால், ஒருநாள் கிரிக்கெட்டிலும் கம்பீர் இந்த ஃபார்முலாவை பின் தொடர்ந்து வருகிறார்.
இடதுகை பேட்ஸ்மேன்
இந்திய அணியின் பேட்டிங் வரிசை முழுக்க முழுக்க வலதுகை பேட்ஸ்மேன்களால் ஆனது. அனைவருமே சிறந்த வீரர்கள் என்றாலும், இடையில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனாவது இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்தது. இதனை உணர்ந்த கவுதம் கம்பீர், புதிதாக எந்த வீரரையும் அணிக்குள் கொண்டு வராமல் அக்சர் படேலை தயார் செய்து அசத்தி இருக்கிறார்.
இந்திய அணியின் திட்டம்
அதாவது 30 ஓவர்களுக்குள் விரைவாக 3 விக்கெட்டுகள் சரிந்தால், உடனடியாக அக்சர் படேல் களமிறங்கி ஒருமுனையில் விக்கெட்டை தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி. அதனை அக்சர் படேல் மிகச்சிறப்பாக செய்வதோடு, சிக ரிஸ்கையும் எடுத்து பவுண்டரி, சிக்சர் என்று பொளந்து கட்டி வருகிறார்.
முக்கிய பங்களிப்பு
நேற்றைய ஆட்டத்தில் கூட ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த பின் மிக முக்கியமான நேரத்தில் களமிறங்கி சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறங்கி ஒருவேளை விக்கெட்டை பறிகொடுத்திருந்தால், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மனதில் நம்பிக்கை வந்திருக்கும். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு அக்சர் படேலே முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.
2023 உலகக்கோப்பை
அதேபோல் இடதுகை பேட்ஸ்மேனாக அக்சர் படேல் இருப்பதால், பவுலர்கள் தொடர்ச்சியாக தங்களின் லைன் மற்றும் லெந்தை மாற்ற வேண்டிய தேவை உள்ளது. இதனால் ஒரு வீரருக்கு ஒரே லைனில் வீசி கவனத்தை செலுத்த முடியாத அளவிற்கு எதிரணி மீது அழுத்தம் ஏற்படுத்துகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் 2023 உலகக்கோப்பை தொடரில் அக்சர் படேல் இந்திய அணிக்குள் இருந்திருக்க வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications