ஷாகின் அப்ரிடி அல்ல.. அந்த ஒரு பவுலரிடம் ரோஹித், கோலி தப்பிக்க வேண்டும்.. இந்திய அணிக்கு எச்சரிக்கை!
துபாய்: நாளை நடக்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஷாகின் அப்ரிடியை விடவும் நசீன் ஷாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அண்மையில் முடிந்த முத்தரப்பு தொடர், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்களில் நசீம் ஷா உச்சக்கட்ட ஃபார்மை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது. பாகிஸ்தான் அணியை விடவும் இந்திய அணி வலிமையாக காணப்பட்டாலும், இந்திய ரசிகர்களிடையே ஏதோவொரு பதற்றம் நிலவி வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை ஒரேயொரு ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் கூட, மூட்டையை கட்டி வீட்டிக்கு புறப்பட வேண்டியதுதான்.

இதனால் இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் ஸ்பின் வலிமையாக உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களில் முகமது ஷமி மட்டுமே நம்பிக்கை தருகிறார். இருந்தாலும் இந்திய அணியின் திட்டம் ஒரே டெம்ப்ளேட்டில் செல்வது எதிரணிக்கு எளிதாக திட்டங்களை வகுப்பு வாய்ப்புகள் கொடுக்கிறது.
பவர்பிளேவில் ரோஹித் சர்மா அதிரடி, விராட் கோலி - சுப்மன் கில் நிதான ஆட்டம், உடனடியாக விக்கெட் சென்றால் அக்சர் படேலை இறக்குவது, நல்ல தொடக்கம் கிடைத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ரன்கள் குவிப்பது, கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஃபினிஷிங் கொடுப்பது என்று இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு என்று ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கி விளையாடி வருகிறது.
இந்த டெம்ப்ளேட்டை கணித்துதான் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தியது. இருப்பினும் இந்திய அணி மீண்டும் அதே டெம்ப்ளேட்டை தொடர்ந்து வருகிறது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணியின் பொறியில் இந்திய அணி சிக்க வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே ஆசியக் கோப்பையின் போது இஷான் கிஷன் மற்றும் மழை வந்து இந்திய அணியை காப்பாற்றியது.
பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் கூட்டணி பலமான பவுலிங் கூட்டணிதான். ஷாகின் அப்ரிடி மட்டும் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டால், நசீம் ஷாவை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகிவிடும். ஏனென்றால் அவரின் பந்துகள்தான் இருப்பதிலேயே அதிகமாக வழுக்கிக் கொண்டு போகும்.
அவரின் ஆக்ஷன் மற்றும் பவுலிங் ஸ்டைலும் கூட பந்து சறுக்கி கொண்டு போகும் வகையில் அமைந்துள்ளது. அப்படியான பந்துகளுடன் எளிதாக 145 கிமீ வேகத்தில் வீசுவதில் எந்த நேரத்தில் விக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக நியூசிலாந்து போட்டியில் வில்லியம்சன் விக்கெட்டை நசீம் ஷா வீழ்த்தியது பலருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கும்.
ஆனால் நசீம் ஷா அப்படியான விக்கெட்டைதான் அதிகமாக வீழ்த்தி இருக்கிறார். இவர்களை தொடக்கத்தில் கட்டுப்படுத்தி விக்கெட்டை மட்டும் கையில் வைத்து கொண்டால், டெத் ஓவர்களில் பாகிஸ்தான் அணி அதிக தவறுகளை செய்யும். ஹாரிஸ் ராஃப் ஓவரில் 2 பவுண்டரி அடித்தாலே தறிகெட்டு ஓடும் வாகனத்தை போல் பந்தை எங்கு வீசுகிறோம் என்றே தெரியாமல் வீசக் கூடியவர். இதனால் இந்திய அணி ஷாகின் அப்ரிடி மற்றும் நசீன் ஷா இருவரிடமும் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications