முதல் சர்வதேச ODI சதம்.. சாதித்து காட்டிய ருதுராஜ்.. கட்டிப்பிடித்து கோலி கொடுத்த ரியாக்ஷன்!
ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் அடிக்கும் முதல் ஒருநாள் சதம் இதுவாகும். 52 பந்துகளில் அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட், அடுத்த 25 பந்துகளில் சதம் விளாசியது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட், நீண்ட நாட்களாகவே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க போராடி வந்தார். இந்தியா அணியில் ஸ்பின்னர்களுக்கு பலரும் திணறி வரும் சூழலில், ருதுராஜ் கெய்க்வாட் சச்சின் டெண்டுல்கர் ஸ்டைலில் 3 ஸ்டம்புகளை காட்டிக் கொண்டு வெளுக்கும் ஆட்டத்தை வைத்திருக்கிறார்.

ஆனாலும் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதால், தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார். இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் முதல் போட்டியில் நம்பர் 4 பேட்ஸ்மேனாக ருதுராஜ் வாய்ப்பை பெற்றார்.
அந்தப் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ருதுராஜ் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் மீண்டும் நம்பர் 4 பேட்ஸ்மேனாக வந்தார். இந்திய அணி 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ருதுராஜ் பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கினார்.
ஆனாலும் மார்கோ யான்சன் பந்தில் கொஞ்சம் திணற, ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை மொத்தமாக எடுத்து கொண்டார். பவுண்டரிகளில் டீல் செய்த ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலிக்கு முன்பாகவே 52 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதையடுத்து முழுக்க முழுக்க ருதுராஜ்ஜின் ராஜ்ஜியம் தான் களத்தில் இருந்தது. பவுண்டரியும், சிக்சருமாய் விளாசி தள்ளினார்.
இதனால் அடுத்த 25 பந்துகளிலேயே ருதுராஜ் கெய்க்வாட் தன்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் சதத்தை விளாசினார். அப்போது எதிர்முனையில் நின்றிருந்த விராட் கோலி, இரு கைகளையும் தூக்கி பாராட்டினார். இதையடுத்து நெருங்கி வந்து கட்டிப்பிடித்து பாராட்டிய கோலி, சில வார்த்தைகள் பேசினார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications