எல்லாம் செட்டிங்.. ரசிகரை காலில் விழ வைத்த ரியான் பராக்.. அசாமில் அந்த பையன் யாரு தெரியுமா?
கவுகாத்தி: 18வது ஐபிஎல் தொடருக்கான 6வது லீக் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி டி காக்கின் அதிரடி ஆட்டத்தால் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன் காரணமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த தோல்விக்கு அவரே பொறுப்பேற்று கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் இடையே நடந்த சம்பவம் ஒன்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்கை ரசிகர்கள் கிண்டல் செய்யும் வகையில் அமைந்தது.

தோனி, விராட் கோலி அல்ல
அவர் பவுலிங் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் ரியான் பராக்கின் காலில் விழுந்தார். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அங்கிருந்த சக வீரர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் பெரியளவில் சாதிக்காத ரியான் பராக்கிற்கு எப்படி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கும் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
கிண்டல் செய்யும் ரசிகர்கள்
ரியான் பராக் சொந்த செலவில் இப்படியொரு ஏற்பாட்டை அரங்கேற்றி இருக்கார் என்று சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோரை போல் அல்லாமல் ரியான் பராக் சாதாரண வீரர்தான். ஆனால் அசாம் மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் தான்.
அசாம் மாநில கிரிக்கெட்
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அசாம் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் ஆடிய முதல் வீரரும் ரியான் பராக் தான். அதேபோல் அசாம் மாநில ரஞ்சி கிரிக்கெட் அணியை உருவாக்கியதில் ரியான் பராக்-கிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. அசாம் மாநில அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரியான் பராக், அந்த அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்.
ராஜஸ்தான் கேப்டன்
17 வயதிலேயே ராஜஸ்தான் அணிக்கு வந்த அவர், 6 ஆண்டுகளாக விளையாடி இந்திய அணி வரை முன்னேறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டதற்கு, அவரின் ரசிகர்களும் ஒரு காரணம். முதல் 3 போட்டிகளில் ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்ட போது, ரசிகர்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை.
அசாமின் கிரிக்கெட்டின் இளவரசன்
ஏனென்றால் மூன்றில் 2 போட்டிகள் கவுகாத்தியில் நடப்பதால், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும், பிட்ச் குறித்த தெளிவும் அவரிடம் இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரியான் பராக் இருப்பதால் மட்டுமே கவுகாத்தியில் ராஜஸ்தான் அணி சில போட்டிகள் விளையாடுகிறது. அசாம் மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையான இளவரசன் ரியான் பராக் தான். அதனால் நேற்றைய சம்பவத்தில் ரியான் பராக்கை கிண்டல் செய்ய தேவையில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications