நண்பர்களுடன் குதூகல குளியல்.. அஸ்வின் மட்டும் என்ன ஸ்பெஷலா? இன்ஸ்டாகிராம் படத்தால் புதிய சர்ச்சை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரையில் உள்ள பரளியாறு பாறைக் கூட்டத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் பரளியாறு பாறைக் கூட்டத்தில் அனுமதிக்கப்படாத நிலையில், அஸ்வின் தனது நண்பர்களுடன் குளித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததில் இருந்தே தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகிறார். ஐபிஎல் தொடரில் அஸ்வினின் ஃபார்ம் காரணமாக அதிக போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. அதேபோல் அஸ்வினின் யூட்யூப் சேனலில் சிஎஸ்கே அணியையே விமர்சித்து, அவரின் குழுவினர் சர்ச்சையில் சிக்கினார்கள்.

சர்ச்சைகளில் அஸ்வின்
தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் அஸ்வின், நடுவரின் தீர்ப்பால் கோபமடைந்து மைதானத்தில் இருந்து பேட்டை வீசியெறிந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை மதுரை அணி வைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகம், உடனடியாக ஆதாரத்தை சமர்ப்பிக்க கூறியது.
டிஎன்பிஎல் விவகாரம்
ஆனால் கடைசி நேரத்தில் மதுரை அணி புகாரை மீண்டும் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில் அஸ்வின் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்காக பயணம் மேற்கொண்ட போது, குமரி மாவட்டம் அருவிக்கரையில் தடை செய்யப்பட்ட பாறைக் கூட்டத்தில் தனது நண்பர்களுடன் குளித்து, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
பரளியாறு பாறைக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்கரையில் பரளியாறு ஓடுகிறது. பாறைகளின் கூட்டத்தின் மீது ஓடும் பரளியாறு தண்ணீர் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். இதில் தமிழ் சினிமாவின் பல பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. சோசியல் மீடியாவின் தாக்கத்தால், இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
புதிய சர்ச்சையில் அஸ்வின்
இந்த நிலையில் பரளியாறு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நண்பர்களுடன் சென்று பரளியாற்றில் பாறைக் கூட்டத்தில் குளித்ததோடு, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதனால் தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அஸ்வின் இப்படியான நடவடிக்கையில் ஈடுபடலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications