ஆர்சிபி நிர்வாகம் செய்த குழப்பம்.. அவசரமாக கொண்டாட்டம் நடந்தது ஏன்? பின்னணியில் அந்த வீரர்கள்!
பெங்களூர்: ஐபிஎல் தொடரை வென்றுவிட்டு ஆர்சிபி அணி அதனை கொண்டாடுவதற்கு பெங்களூர் சின்னச்சாமி மைதானத்திற்கு வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 47 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். 14 வயது சிறுமியை போலீஸ்காரர் ஒருவர் தூக்கிக் கொண்டு வரும் காட்சி அனைவரின் மனதையும் உலுக்கி இருக்கிறது.
ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்திற்காக வந்தவர்கள் துயரத்துடன் வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாக நேற்றைய தினம் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளியில் கூட்ட நெரிசலில் சிக்கி சூழல் உச்சத்தில் இருந்த போதும் கூட, ஆர்சிபி அணியினர் மைதானத்திற்குள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவசர கொண்டாட்டம்
அதேபோல் ஆர்சிபி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சம்பவத்திற்கு கர்நாடகா அரசு மன்னிப்பு கோரி இருக்கிறது. ஆனால் உடனடியாக ஆர்சிபி அணி நிர்வாகத்திடம் இருந்தோ, வீரர்களிடம் இருந்தோ எந்த இரங்கல் பதிவும் வெளியாகவில்லை. ரசிகர்களுடன் கொண்டாட வந்தவர்கள், ரசிகர்கள் பற்றி கொஞ்சமும் கவலையின்றி கொண்டாட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
திட்டமிட்டது எப்போது?
நேற்று முன் தினம் இரவு 11.30 மணிக்கு பின்னரே ஆர்சிபி அணியின் வெற்றி உறுதியாகியது. அப்போதே அடுத்த நாளில் பெங்களூர் மண்ணில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டுவிட்டது. ஐபிஎல் தொடரை வென்ற ஆர்சிபி அணியின் வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஆயத்தமானார்கள். ஏனென்றால் ஹேசல்வுட் போன்றவர்கள் உடனடியாக லண்டன் செல்ல வேண்டும்.
வெளிநாட்டு வீரர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஹேசல்வுட் விளையாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் செல்வதற்கு முன்பாகவே சின்னச்சாமி மைதானத்தில் கொண்டாட்டத்திற்கு ஆர்சிபி அணி ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால் ஒரு வெற்றி பேரணியோ, கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தோ ஆர்சிபி அணி நிர்வாகம் எந்த கவலையும் கொள்ளவில்லை.
ஆர்சிபி அணியின் தவறான பதிவு
வார நாட்களில் வெற்றி பேரணி செல்ல இயலுமா என்பதை கூட ஆர்சிபி அணி நிர்வாகம் சிந்திக்காமல், அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. கர்நாடகா அரசு தரப்பில் வெற்றிப் பேரணி ரத்து என்று 1 மணியளவிலேயே சொல்லப்பட்ட போதும் கூட, ஆர்சிபி அணியின் எக்ஸ் பக்கத்தில் 5 மணிக்கு வெற்றிப் பேரணிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டது. இதனை நம்பி ரசிகர்கள் பெருமளவில் சாலைகளில் குவிய தொடங்கிவிட்டனர்.
விமர்சனம்
இந்த கொண்டாட்டத்தினை வார இறுதி நாட்களில் ஆர்சிபி அணி திட்டமிட்டிருந்தால், இவ்வளவு பெரிய இழப்புகளை சந்திக்க வேண்டிய சூழல் வந்திருக்காது என்று பார்க்கப்படுகிறது. இதனால் கிரிக்கெட் வீரர்களும், கார்ப்பரேட் நிர்வாகங்களும் தங்களின் வியாபார நோக்கத்துடன் செயல்படாமல், ரசிகர்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications