‛அந்த பாடலை போடாதீங்க.. டிஜேவிடம் கூறிய ரோகித்? பாகிஸ்தான் தோற்றது ஏன்? கலாய்த்த மைகேல் வாகன்
சென்னை: உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றது. இந்த போட்டியின்போது ரோகித் ஷர்மா குறிப்பிட்ட ஒரு பாடலை மைதானத்தில் இசைக்க வேண்டாம் எனக்கூறியது தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைகேல் வாகன் கூறி பாகிஸ்தான் அணியை பங்கமாய் கலாய்த்துள்ளார்.
50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 163 ரன்களும், மிட்செல் மார்ஸ் 121 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்து அசத்தி இருந்தது.
இதையடுத்து 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
நடப்பு உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளதோடு, 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளன. இதனால் இரு அணிகளும் தலா 4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன. தற்போதைய புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.
முன்னதாக பாகிஸ்தான் அணி கடந்த 14ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் ஷர்மா 86 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வென்றது. அதோடு ஒருநாள் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாற்றை இந்தியா தக்க வைத்துள்ளது.
மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி என்பது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. அதாவது பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூம் சென்றபோது இந்திய ரசிகர்கள் ‛ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டது விவாதத்தை கிளப்பியது. அதோடு பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கடும் புகாரை முன்வைத்தார்.
அதாவது அகமதாபாத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது ஐசிசி போட்டி போல் அல்லாமல் பிசிசிஐ நடத்திய இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி போன்று இருந்ததாக கூறியிருந்தார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு உத்வேகம் அளிக்கும் ‛தில் தில் பாகிஸ்தான்' எனும் பாடல் மைதானத்தில் ஒலிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி இருந்தார். அதோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐசிசியிடம் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்த்ரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைகேல் வாகன் பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது மைகேல் வாகன் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் பாட்காஸ்ட் ஒன்றின் மூலம் உரையாடினார்கள். அப்போது இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து விவாதித்தனர்.
இந்த வேளையில் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவின் செயல்பாட்டை அவர் புகழ்ந்து பேசினார். அப்போது தான் மைகேல் வாகன் குறுக்கிட்டு பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்த்தரை பங்கமாய் கலாய்த்தார். அதாவது மைதானத்தில் ‛தில் தில் பாகிஸ்தான்' எனும் பாடல் ஒலிக்கப்படவில்லை என அவர் கூறியதை மனதில் வைத்து அவர் கலாய்த்துள்ளார்.
அதாவது அஜித், கருணாஸ் நடித்த தமிழ் திரைப்படம் ஒன்றில் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற வகையில் ‛தில் தில் பாகிஸ்தான்' பாடல் ஒலிபரப்பாததால் தான் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்ததாக மிக்கி ஆர்தர் தெரிவித்து இருந்ததை அவர் கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக மைகேல் வாகன் கூறியதாவது:
"கில்லி (கில்கிறிஸ்ட்டின் செல்லப்பெயர்) நீங்கள் ரோகித் ஷர்மாவின் திறமை குறித்து சரியாக சொல்லி இருக்கிறீர்கள். அதாவது வீரர்களை பயன்படுத்திய விதம், முகமது சிராஜுக்கு கூடுதல் ஓவரை வழங்கியது பற்றி பேசியிருக்கிறீர்கள். அதோடு ரோகித் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதை சொல்லி இருக்கிறீர்கள். இந்த வேளையில் நான் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன்.
பாகிஸ்தான் அணியின் இயக்குனர் விமர்சிப்பது போல் "தில் தில் பாகிஸ்தான்" பாடலை ஒலிபரப்ப வேண்டாம் என டிஜேவிடம் ரோகித் ஷர்மா கூறியது தான் அவரது கேப்டன்சியில் முக்கிய நகர்வாக உள்ளது. ஏனென்றால் அந்த பாடல் ஒலிக்காதது தான் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணம் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதனை முன்கூட்டியே அறிந்து தான் ரோகித் ஷர்மா 'தில் தில் பாகிஸ்தான்' பாடலை ஒலிக்கவிட கூடாது என டிஜேவிடம் கூறியுள்ளார். இந்த உத்வேகம் தரும் பாடலை பாகிஸ்தான் அணியினர் கேட்காமல் களத்தில் விளையாடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள் என ரோகித் தெரிவித்துள்ளார். இது ரோகித்தின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. ஏனென்றால் பெரும்பாலான கேப்டன்கள் டிஜேக்கள் குறித்து யோசிப்பது இல்லை. ஆனால் அந்த விஷயத்தில் ரோகித் ஷர்மா முன்னிலையில் உள்ளார்'' எனக்கூறி கலாய்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications