இந்திய டி20 கேப்டன் ரேஸில் சுப்மன் கில், திலக்.. சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு நோ சொன்ன கம்பீர்!
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய இந்திய டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக எதிர்காலத்திற்கான மாற்று கேப்டனை உருவாக்கும் நோக்கில், இரண்டு இளம் வீரர்களின் பெயர்களைத் தேர்வுக்குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில், மூத்த வீரர் ஒருவரின் ரீ-என்ட்ரிக்கு கௌதம் கம்பீர் முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பையை வென்ற போதிலும், உலகக்கோப்பைத் தொடர் மற்றும் இந்த ஐபிஎல் சீசனில் அவரது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது சூர்யாவுக்கு 35 வயது ஆவதைக் கருத்தில் கொண்டும், அடுத்த 2028 உலகக்கோப்பையை மனதில் கொண்டும் இப்போதே ஒரு இளம் கேப்டனை உருவாக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கேப்டன் பதவிக்கான ரேசில் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். ஏற்கனவே ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் இவருக்கு சாதகமாக உள்ளது. அதேபோல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாகவும் சுப்மன் கில் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த ரேசில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக இளம் வீரர் திலக் வர்மா இணைந்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் 'இந்தியா ஏ' அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளதே இதற்கான பின்னணி காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவுக்கு பின் மும்பை அணி மற்றும் இந்திய அணி என இரண்டிலும் திலக் வர்மாகை கேப்டனாக வளர்க்க திட்டமிடப்படுவதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் பிசிசிஐ தலைமையில் இருப்பவர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் பெயரை பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய டி20 அணிக்குள் நுழைவதற்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டி20 கிரிக்கெட்டுக்குத் தேவையான அதிரடி ஸ்ரேயாஸ் ஐயரிடம் இல்லை என்று கம்பீர் கருதுகிறார்.
கௌதம் கம்பீரை பொறுத்தவரை, அதிரடியாக ஆடக்கூடிய இளம் வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். இதனாலேயே ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களை விடுத்து, திலக் வர்மா மற்றும் சுப்மன் கில் போன்ற அதிரடியாக விளையாடும் திறன் கொண்ட இளைஞர்களை கேப்டன்சி பொறுப்புக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்.
சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி எதிர்காலம் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் டி20 வாழ்க்கை இந்த முடிவுகளால் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் அறிவிக்கப்படவுள்ள இந்திய டி20 அணியில் இந்த அதிரடி மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்பதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications