பெஞ்சிலேயே இருங்க துணைக் கேப்டன்.. அக்சர் படேலுக்கு ஆப்பு.. பின்னணியில் கம்பீர் செய்த தரமான சம்பவம்
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் துணைக் கேப்டன் அக்சர் படேல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்கா அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி, மார்கோ யான்சன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் இந்திய அணியில் ஒரு மாற்றம் கூட செய்யப்படவில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் மீண்டும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதேபோல் இந்திய அணியின் துணைக் கேப்டன் அக்சர் படேல் பெஞ்ச் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு அணியின் துணைக் கேப்டனையே பெஞ்ச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அக்சர் படேல் மிகவும் பாவம் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இத்தனைக்கும் அக்சர் படேல் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார். நமீபியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் அக்சர் படேலின் பந்துகள் மிகச்சிறப்பாக அமைந்தன.
அதுமட்டுமல்லாமல் அகமதாபாத் மைதானம் அக்சர் படேலின் சொந்த மைதானமாகும். மண்ணின் மைந்தரான அக்சர் படேலை பெஞ்சில் உட்கார வைக்க என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் வரிசையே காரணம். ஏனென்றால் டி காக், ரிக்கல்டன், மில்லர் என்று முக்கியமான 3 பேட்ஸ்மேன்களும் இடதுகை பேட்ஸ்மேன்கள்.
இதனால் இவர்களை சமாளிக்க ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரின் பங்கு மிகவும் அவசியம். மிடில் ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை சாய்த்தால், இந்திய அணிக்கு சேஸிங் எளிதாக அமையலாம். இதன் காரணமாகவே துணைக் கேப்டன் என்றும் பாராமல் அக்சர் படேல் பெஞ்ச் செய்யப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications