தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி.. சொந்த மண்ணில் இலங்கையை அலறவிட்ட ஜிம்பாப்வே அணி.. ராசாவின் வெறியாட்டம்!
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஜிம்பாப்வே அணி வீழ்த்தி இருப்பது அந்த அணி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சிறப்பாக ஆடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 4 சிக்ஸ் உட்பட 45 ரன்களை குவித்தார்.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து இலங்கை அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. இதன்பின் ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரையன் பென்னட் - மருமாணி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இவர்கள் இருவருமே பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுக்காமல் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். இதனால் 6 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 55 ரன்களை குவித்தது. இதன்பின் இலங்கை அணியின் பவுலர்கள் கட்டுப்படுத்த தொடங்கினர். சிறப்பாக ஆடிய மருமாணி 34 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரியான் பர்ல் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார்.
ஆனால் ஷனகாவின் பவுலிங்கில் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா வந்தார். அப்போது வரை ஆட்டம் இலங்கை அணியின் கைகளில் இருந்தது. ஆனால் சிக்கந்தர் ராசா கொஞ்சம் கூட அசராமல் 6, 6, 4 என்று விளாச, மீண்டும் தீக்சனா ஓவரில் 6, 4 என்று பறக்கவிட்டார். இதனால் ஜிம்பாப்வே அணி எளிதாக 150 ரன்களை கடந்தது.
இதனிடையே சிறப்பாக பென்னட் 41 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஆனால் சிறப்பாக ஆடிய ராசா 26 பந்துகளில் 45 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த முசிகிவா 1 ரன்னிலும் வெளியேறினார். இறுதியாக கடைசி ஓவரில் 8 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, உடனடியாக சிக்ஸ் விளாசி ஜிம்பாப்வே அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இதன் மூலமாக இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஜிம்பாப்வே அணி வீழ்த்தி மறக்க முடியாத தோல்வியை பரிசளித்துள்ளது. இதன் மூலமாக குரூப் பி பிரிவில் 3 வெற்றிகளுடன் ஜிம்பாப்வே 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியை ஜிம்பாப்வே அணி வீழ்த்திய நிலையில், தற்போது இலங்கை அணியை அலறவிட்டுள்ளது. இதனால் இந்திய அணி ஜிம்பாப்வே அணியிடம் எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications