பிசிசிஐ நினைத்தாலும்.. இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைக்க முடியாது.. ஐசிசி விதி என்ன?
மும்பை: யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை விளாசி தள்ளி இருக்கிறார். இதனால் இந்திய அணிக்குள் வைபவ் சூர்யவன்ஷியை கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் பிசிசிஐ நினைத்தாலும், உடனடியாக வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்குள் கொண்டு வர முடியாது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய யு19 அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்று சம்பவத்திற்கு அடிப்படையாக வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடிய வைபவ் சூர்யவன்ஷி முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 175 ரன்களை விளாசி தள்ளி இருக்கிறார். அதாவது சிக்ஸ் மற்றும் பவுண்டரி மூலமாக மட்டுமே 150 ரன்களை வைபவ் சூர்யவன்ஷி விளாசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ், இஷாந்த் சர்மா உள்ளிட்ட வீரர்களின் பவுலிங்கை வைபவ் சூர்யவன்ஷி வெளுத்து கட்டினார்.
இதனால் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கிரிஸ் ஸ்ரீகாந்த், ஏன் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்குள் கொண்டு வராமல் இருக்கிறார்கள் என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில் பிசிசிஐ நிர்வாகமே நினைத்தாலும், வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்குள் கொண்டு வர முடியாது என்பது தெரிய வந்துள்ளது. அதற்கு 2020ஆம் ஆண்டு ஐசிசி கொண்டு வந்த விதிதான். இளம் வீரர்களின் உடல் மற்றும் மனநலன் மிகவும் முக்கியமானது. அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வீரருக்கு குறைந்தபட்சம் 15 வயதாகி இருக்க வேண்டும் என்று விதிகள் கொண்டு வரப்பட்டது.
தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயது மட்டுமே ஆகிறது. இவர் 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறந்தார். இதனால் ஐபிஎல் தொடருக்கு பின் வைபவ் சூர்யவன்சி 15 வயதை எட்டிவிடுவார். இதையடுத்து இந்திய அணியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல் யு19 உலகக்கோப்பை தொடரில் என்ன வயது இருந்தாலும், ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும்.
அதனை பிசிசிஐ கடுமையாக பின்பற்றி வருகிறது. இதனால் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் யு19 உலகக்கோப்பையிலும் விளையாட முடியாது. அதுமட்டுமல்லாமல் வைபவ் சூர்யவன்ஷி மே மாதத்திற்கு பின் இந்திய அணியில் அறிமுகமாகினால், அவரால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications