இதுக்கு மேலயுமா நிரூபிக்கணும்.. மீண்டும் சம்பவம் செய்த விராட் கோலி.. பெங்களூரை அதிரவிட்ட கிங்!
பெங்களூர்: விஜய் ஹசாரே தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி 61 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். மறுமுனையில் மும்பை அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டனர். இதனால் இவர்களின் கவனம் முழுக்க ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இருக்கிறது. ஒரேயொரு வடிவிலான கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவதால், இருவருமே அபாரமான ஃபார்மில் உள்ளனர்.

அது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்களில் வெளிப்பட்டது. ஆனால் இவர்களை இந்திய அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி மறைமுகமாக சில சிக்கல்களை உருவாக்கி வருகிறது. முதலில் வயது மற்றும் ஃபிட்னஸ் பிரச்சனையை கையில் எடுத்தனர்.
அதற்கேற்ப இருவருமே ஃபிட்னஸ் உடன் கம்பேக் கொடுத்ததோடு, ஐசிசி தரவரிசையிலும் முதல் 2 இடங்களை பிடித்து அசத்தினர். இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கு இடையிலான இடைவெளியை காரணம் காட்டி இருவரும் ஃபார்மில் இருப்பார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கூட்டணி உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்க தயார் என்று அறிவித்தனர்.
இதற்கேற்ப விஜய் ஹசாரே தொடருக்கான டெல்லி மற்றும் மும்பை அணிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். முதல் போட்டியிலேயே இருவரும் அபார சதம் அடிக்க, இன்று 2வது சுற்றுப் போட்டிகள் தொடங்கியது. இதில் குஜராத் அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 1 ரன்னில் ஆட்டமிழக்க, விராட் கோலி களம் புகுந்தார்.
அதிரடியாக ஆடிய விராட் கோலி 61 பந்துகளில் ஒரு சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 77 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களை சேர்த்தது. டெல்லி அணிக்காக விராட் கோலி அதிக ரன்களை குவித்தார். அதேபோல் மறுபக்கம் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக மும்பை அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை பார்க்க காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் ரோகித் சர்மா எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறியதால் ரசிகர்கள் சோகம் அடைந்தனர். இருப்பினும் விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications