இலங்கையில் கடும் நிலச்சரிவு: 24 பேர் பலி – 9 லட்சம் பேர் தவிப்பு
பாதுளை: இலங்கையில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுக்கு 24 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 9 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக பதுளை, அங்தெனிய மற்றும் அதை ஒட்டிய பிரதேசங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமானோர் மண்ணோடு மண்ணாகபோயினர். இதில் 24 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளின் மீது மண் சரிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக முப்படையினரும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர். மண் சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளும் முடிக்கிவிடப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட குடியிருப்புகள் மண்ணில் புதைந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் மாண்ட அதே பதுளை மாவட்டத்தில் தான் தற்போதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால் 80 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 9 லட்சம் பேர் மழை வெள்ளம் நிலச்சரிவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் பாதைகளில் பல இடங்களில் மண் சரிந்துள்ளதால் கொழும்பு - பதுளை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மலை ரயில் பாதை வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications