தேர்தலில் நடந்த ட்விஸ்ட்.. இலங்கையில் புது வரலாறு படைத்த அநுர குமார திசநாயக.. வெற்றி பெற்றது எப்படி?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை, இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டிராத நிலையில், நேற்றுதான் முதன் முதலாக 2வது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் யாருமே 50% வாக்குகள் பெறாத நிலையில் 2வது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில், அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 9வது அதிபராகிறார் அநுர குமார திசநாயக.
5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசநாயக, 2024 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது புருவங்களையும் உயரச் செய்துள்ளது. 5 ஆண்டுகளில், தனது நிலையை உயர்த்தி சாதித்துக் காட்டியுள்ளார் இந்த இடதுசாரி தலைவர்.

இலங்கை அதிபர் தேர்தல்: இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்தலில், வேட்பாளர் பட்டியலில் உள்ள 3 பேரை வாக்காளர்கள் தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். அதன்படி, 50%க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யாரும் 50% வாக்குகளைப் பெறாவிட்டால் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 75% வாக்குகள் பதிவாகின. அதே சமயம் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று முன்தினமே தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திசநாயக்க முன்னிலையில் இருந்தார். அவருக்கு 42.31% வாக்குகள் கிடைத்தது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவுக்கு 32.76% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.27% வாக்குகளும் பதிவாகின.
அநுர வெற்றி: எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டவில்லை. இதையடுத்து, இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றிலே இரண்டாவது விருப்ப வாக்கை எண்ணுவது இதுவே முதல்முறை. கடும் இழுபறி நீடித்த நிலையில் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இறுதி முடிவுகளின் படி, அநுர குமார திசநாயக, 57,40,179 வாக்குகள் (55.89%) பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச, 45,30,902 வாக்குகள் (44.11% வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் வெற்றியானது இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அநுர குமார திசநாயக பதவி ஏற்க உள்ளார்.
யார் இந்த அநுர குமார திசநாயக?: தலைநகர் கொழும்புவில் இருந்து 170 கி.மீ தொலைவில் உள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி பிறந்தவர் அநுர குமார திசநாயக்க. தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திசநாயக்க, அங்கிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தனது 19வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார்.
கடந்த 1995ஆம் ஆண்டு அவரை சோஷலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஜே.வி.பி. நியமித்தது. அக்கட்சியின் மத்திய பணிக் குழுவிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன மூலமாக நாடாளுமன்றத்திற்குள் எம்.பியாக நுழைந்தார் அநுர குமார. 2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்று எம்.பி ஆனார்.
எம்.பி: கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர குமார திசநாயக்க, 1,53,868 வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் சென்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து அமைத்த கூட்டணி ஆட்சியில் விவசாயம், கால்நடைகள், நீர்பாசனத் துறை அமைச்சராக அநுர குமார திசநாயக்க பதவி வகித்தார். ஆனால், இலங்கையை புரட்டிப் போட்ட சுனாமிக்குப் பிறகு, வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவு செய்தபோது, அதை எதிர்த்து ஜே.வி.பி அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். அநுரவும் பதவி விலகினார். அந்த அளவுக்கு புலிகள் எதிர்ப்பு கொள்கை கொண்டவர் இவர்.
ஏகேடி புயல்: கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் அநுர குமார திசநாயக. அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார். அப்போது வெறும் 3.1 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வெடித்த புரட்சிக்கு AKD என்றழைக்கப்படும் அநுர குமார திசநாயக துவக்கப்புள்ளியாக இருந்த நிலையில், அதன் பிறகு அவருக்கான ஆதரவு அலை பெருகியுள்ளது. அப்போது, 3.1 சதவீதமே பெற்றவர் இந்த தேர்தலில் பல மடங்கு கூடுதல் வாக்குகளை வாங்கும் அளவுக்கு அரசியலில் பெரும் சக்தியாக மாறியிருக்கிறார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications