விஷ ஊசி போட்டு விடுதலைப் புலிகள் கொடூர மரணம்.. வெளிநாட்டு டாக்டர்கள் விசாரிக்க கோரிக்கை!
யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மர்மமான முறையில் மரணமடைந்து வருவது தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்கள் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது 11,000 விடுதலைப் புலிகளை கைது செய்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இவர்கள் அனைவரும் சில ஆண்டுகாலம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளில் 108 பேர் இதுவரை மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும் 11,000 போராளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணசபையில் நேற்று ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், உறுப்பினர் ரவிகரன் இணைந்து இந்த தீர்மானத்தை முன்வைத்தனர்.
அப்போது பேசிய வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இலங்கை ராணுவம் தடுத்து வைத்திருந்த போது போராளிகளுக்கு ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது; அதுதான் அவர்கள் உடல்நிலையை மோசமடைய செய்திருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
பின்னர் இலங்கை ராணுவ சிறையில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு தரப்பட்ட உணவுப் பொருட்களில் விஷம் கலந்து இருந்ததா? அவர்களுக்கு விஷ ஊசி செலுத்தப்பட்டதா? என்பது குறித்து வெளிநாட்டு மருத்துவர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications