டெல்லிக்கு தப்பிப் போய் தலைமறைவாக இருந்தார் பிரபாகரன்... இலங்கையைக் கலக்கும் புத்தகம்!
கொழும்பு: ஈழப் போர் முடியும் தருவாயில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்குத் தப்பிப் போய் விட்டார். அவர் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்று கூறும் ஒரு புத்தகம் இலங்கையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிரபாகரனை இலங்கை ராணுவம் கொல்லவில்லை என்றும் அவர் தப்பிப் போய் விட்டதாகவும் அந்தப் புத்தகம் கூறுகிறது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழத்தில் போர் முடிவுக்கு வந்தது. பல லட்சம் தமிழர்கள் பூண்டோடு கொல்லப்பட்டனர். உலக சமுதாயம் அமைதியாக வேடிக்கை பார்க்க ரத்த வேட்டையாடியது இலங்கைப் படைகள்.

இறுதிப் போருக்குப் பின்னர் பல ஆயிரம் தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இறுதிப் போரின்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஒரு உடலையும் காட்டி இதுதான் பிரபாகரன் உடல் என்று கூறியது. ஆனால் அவரது மனைவி, மகள் உள்ளிட்டோர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இலங்கை அரசும் எதுவும் சொல்லவில்லை.
ஆனால் பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று புலிகள் தரப்பிலிருந்து முதலில் அறிக்கை வந்தது. அதன் பின்னர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக கேபி அறிவித்தார். ஆனால் கேபியும் பின்னர் கைது செய்யபப்ட்டு விட்டார்.
பிரபாகரன் இருப்பு குறித்து தொடர்ந்து சர்ச்சையாகவே இருக்கிறது. உலகத் தமிழர்கள் மத்தியில் அவர் உயிருடன் இருப்பதாக பலரும் நம்புகிறார்கள். இல்லை, அவர் உயிருடன் இல்லை என்று கூறுவோரும் உள்ளனர்.
இந்த நிலையில், சிங்கள நாளிதழ் ஒன்று பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு புத்தகம் வெளியாகியுள்ளதாம். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில் இலங்கையில் இருந்து தப்பிச்சென்ற பின்னர் அவர் டெல்லியில் திரிலோனபூர் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் ஒரு வருடம் தங்கி இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
பிரபாகரன் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபரைத்தான் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்றும், அவரின் போட்டோக்களைத்தான் பிரபாகரன் போட்டோ என்று இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த புத்தகத்தை எழுதினார், எந்த மொழியில் வெளியாகியுள்ள புத்தகம் இது, என்ன பெயர் என்ற எந்த விவரத்தையும் அந்த இதழ் தெரிவிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளதால், யாரேனும் வேண்டும் என்றே கிளப்பி விட்ட தகவலா என்று ஐயப்பாடும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications