ராஜபக்சே நியமித்த வடக்கு மாகாண ஆளுநரை டிஸ்மிஸ் செய்த அதிபர் சிறிசேன
கொழும்பு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திராசிறியை பணிநீக்கம் செய்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைப் போரில் யாழ்ப்பாணம் பகுதியில் ராணுவ உயர் அதிகாரியாக இருந்தவர் சந்திராசிறி. விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்ட்ட உடன் கடந்த 2009ம் ஆண்டு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திராசிறியை தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண ஆளுநராக நியமித்தார் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே. இந்நிலையில் சந்திராசிறி தங்கள் அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதாக வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புகார் தெரிவித்து வந்தார். அதை ராஜபக்சே கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தமிழர்களின் ஆதரவை பெற சந்திராசிறியை ஆளுநர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். மேலும் இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பல்ஹக்காராவை வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமித்துள்ளார் சிறிசேன.
பல்ஹக்காரா விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. பல்ஹக்காரா ஐ.நா.வுக்கான இலங்கை தூதராக இருந்துள்ளார். அவர் ஜெனிவா மற்றும் நியூயார்க்கில் ஐ.நா.வின் பல திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
38 ஆண்டுகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றிய பல்ஹக்காரா கடந்த 2006ம் ஆண்டு இலங்கையின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார்.












Click it and Unblock the Notifications