இலங்கை வரும் மோடியுடன் 13வது அரசியல் சாசன திருத்தம் குறித்து ஆலோசனை: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
கொழும்பு: இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடியுடன் மாகாணங்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் தேதி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இலங்கை செல்கிறார். மேலும் கடந்த 28 ஆண்டுகளில் இலங்கை செல்லும் முதல் இந்திய பிரதமரும் மோடி தான்.

1987 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜிவ் காந்திதான் இலங்கைக்கு கடைசியாக அதிகாரப்பூர்வ பயணமாக சென்ற இந்திய பிரதமராவார். அப்போதுதான் இந்திய- இலங்கை ஒப்பந்தம் உருவானது.
இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்காக இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் இலங்கை பயணம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன், மோடி இலங்கை வரும்போது அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13வது சட்டத்திருத்தம் பற்றி பேச உள்ளோம். அந்த சட்டத்திருத்தத்தின்படி மாகாண அரசுகளுக்கு காவல்துறை, நிலம் உட்பட பல்வேறு துறைகளில் கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications