இலங்கை இறுதிப் போரில் தமிழர்கள் படுகொலையான இட படங்களை வெளியிட்டது யு.எஸ்!
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை வெளியிட்டது அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம்.
இலங்கையில், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட சண்டை நடந்தது. அப்போது, அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம்பேரை ராணுவம் குண்டு வீசி கொன்றதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இதுபற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்து வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா சார்பில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவுக்கான சர்வதேச குற்றவியல் நீதித்துறை தூதர் ஸ்டீபன் ஜே.ராப், ஒரு வாரகால பயணமாக இலங்கை வந்துள்ளார்.
அதில் 2 நாட்கள் பயணமாக அவர் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டார். முள்வேலி முகாம்களையும் பார்வையிட்டார்.

அங்கு தன்னை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகளிடம், இலங்கை அரசுக்கு எதிராக மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 3-வது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர உள்ளதாக ஸ்டீபன் ஜாப் தெரிவித்தார்.
இந்நிலையில், இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் கொலை செய்யப்பட்ட இடங்களின் படங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டது. தனது ‘ட்விட்டர்' பக்கத்தில், ‘இலங்கை ராணுவ குண்டு வீச்சால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட செயின்ட் அந்தோணி மைதானம்' என்று அந்த படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இறுதிக்கட்ட போர் நடந்த இடங்களின் படங்களையும், ‘நோ பயர் சோன்' எனப்படும் பாதுகாப்பு மண்டலங்களின் படங்களையும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டது.












Click it and Unblock the Notifications