டாப் 20 பயங்கரவாத அமைப்பு எது? இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12ம் இடம்.. வெடித்த சர்ச்சை.. என்னாச்சு?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 61 தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 39 பேர் பலியானதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஇபி எனும் நிறுவனம் 2022ம் ஆண்டில் நடந்த தாக்குதல், உயிர்பலி அடிப்படையில் உலகளாவிய பயங்கரவாத அமைப்புகள் 2023 எனும் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை பின்னுக்கு தள்ளி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 12வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டு ஐஇபி எனும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute of Economics an Peace) செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாத அமைப்புகளில் மிகவும் மோசமானவை எவை? என்பது குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இது Dragonfly-ன் பயங்கரவாத டிராக்கர் தரவின் அடிப்படையில் பட்டியல் வெளியிட்டு வருகிறது

டாப் 20 பயங்கரவாத அமைப்பு பட்டியல்
அதன்படி உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் இன்டெக்ஸ் 2023 என்ற பெயரில் புதிய பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் மோசமான பயங்கரவாத அமைப்புகள் என 20 அமைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதாவது 2022ம் ஆண்டில் பயங்கரவாத அமைப்புகளால் ஏற்பட்ட உயிர் பலி, தாக்குதல், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் தற்போது வெளியாகி உள்ள பட்டியல் இந்தியாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடம்
ஏனென்றால் இந்த பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் இடம்பெற்றுள்ளது. உலகில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் 12வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் சார்பில் 61 தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 39 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடித்த சர்ச்சை
இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) அரசியலில் செயல்பட்டு வருகிறது. மாறாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வெளியாகி உள்ள பட்டியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

லஷ்கர் இ-தொய்பாவுக்கு முன்பாக
மேலும் உலகளவில் சதிவேலைகளை செய்து வரும் எல்இடி எனும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னால் தான் உள்ளது. இந்த பட்டியலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு 16வது இடத்தில் உள்ளது. இது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் 6 தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது. இதில் மொத்தம் 38 பேர் காயமடைந்ததாகவும், 8 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்க்கு முதலிடம்
இந்த பட்டியலில் முதலிடத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உள்ளது. ஐஎஸ் பயங்கரவாத தாக்குதலில் கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 410 தாக்குதல்களை நடத்தி உள்ளது. 1,045 பேர் பலியாகி உள்ள நிலையில் 644 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் சேமாலியாவின் அல்-ஷாபாப் என்பது உள்ளது.

இந்தியாவுக்கு 13வது இடம்
மேலும் பயங்கரவாத அமைப்புகளின் தாக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் 7.175 புள்ளிகளுடன் இந்தியா 13வது இடத்தில் உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் 18.822 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மாறாக உருகுவே, தென்னாப்பிரிக்கா, ருவாண்டோ, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் 0.826 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications