காஞ்சிபுரம் கொள்ளைச் சம்பவம்- 60 லட்சம் மட்டுமே திருட்டு; 1 கோடி தப்பித்தது!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் துணிகர கொள்ளை நடத்திய சம்பவத்தில் ரூபாய் 60 லட்சம் மட்டுமே கொள்ளை போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காரில் இருந்த கிட்டதட்ட 1 கோடி ரூபாய் அவர்களிடம் இருந்து தப்பியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாரில் நகைக்கடை வைத்திருப்பவர் அசோக்குமார். இவர் அதே பகுதியில் நகைக்கடையை விரிவுபடுத்த கடை ஊழியர்கள் பிச்சாண்டி, மெய்வண்ணன் ஆகியோரிடம் ரூபாய் 1 கோடியே 80 லட்சத்தை கொடுத்து நகை வாங்க நேற்று காலை சென்னைக்கு அனுப்பினார். காரை டிரைவர் பாஸ்கர் ஓட்டிச் சென்றார்.

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னியம்மன் பட்டரை பகுதியில் கார் சென்ற போது அவர்களை பின் தொடர்ந்து 2 கார்கள் வந்தன. திடீரென 2 கார்களில் இருந்த மர்ம நபர்கள் நகைக்கடை ஊழியர்கள் சென்ற கார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் கார் கண்ணாடி உடைந்து ஊழியர் மெய்வண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை நிறுத்தினார்.
அப்போது 10 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் நகைக்கடை ஊழியர்களின் காரை சுற்றி வளைத்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இதனால் காரில் இருந்த டிரைவர், ஊழியர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி விட்டனர். உடனே முகமூடி கும்பல் காரில் இருந்த ஒரு பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றது.
பின்னர் கார் இருக்கும் இடத்திற்கு வந்த நகைக்கடை ஊழியர்கள் காருக்குள் சென்று பார்த்த போது ரூபாய் 60 லட்சம் இருந்த பணப்பை கொள்ளை போனது தெரியவந்தது. மற்ற 2 பைகளில் இருந்த ரூபாய் 1 கோடியே 20 லட்சம் கொள்ளையர்கள் கண்களில் சிக்காததால் தப்பியது. இந்த சம்பவம் பற்றி கார் டிரைவர், ஊழியர்கள் தங்கள் கடை உரிமையாளர் அசோக்குமாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அவர் இது பற்றி பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து போலீசாரிடம் புகார் செய்தார்.
கொள்ளைச்சம்பவம் குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்கடை ஊழியர்கள், கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications