ஸ்ரீபெரும்புதூரில் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது தாக்குதல்: போராடிய தொழிலாளர்கள் கைது
சென்னை: சென்னை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலையில் நிரந்தர பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் முயற்சிகளை தட்டிக்கேட்டவர்கள் மீது நிர்வாக அதிகாரிகள் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ளது என்.வி.ஹெச். இண்டியா தொழிற்சாலை.கார் உதிரிபாகம் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் 120 பேர் நிரந்தர பணியாளர்கள். இவர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக ஒப்பந்த அடிப்படையிலும் அப்பரண்டீஸாகவும் ஆட்களை நியமிக்க தொழிற்சாலை நிர்வாகம் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் எந்த நேரமும் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்துடன் நிரந்தர தொழிலாளர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு கம்பெனி சேர்மனிடம் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பூபாலன் என்பவரை சேர்மன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைக் கண்டித்து சக தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தர்மசீலன் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பகிரங்க மன்னிப்பு கேட்க ஆலை சேர்மன் மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
தாக்குதல் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸில் தொழிலாளர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும் என்பதால், நிரந்தர தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முயன்று வருகிறது. முதல் கட்டமாக பணி பாதுகாப்பு வேண்டி தொழிற்சங்கத்தில் இணைந்ததற்காக 2 பேரையும் வேறு சில பொய்யான காரணங்களைக் கூறி 13 பேரையும் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
மேலும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தட்டி கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பூபாலன் என்ற தொழிலாளியை ஆலையின் சேர்மன், தாக்கினார். குண்டர்களை ஏவி அவரை வெளியேற்றினார். இச்சம்பவம் குறித்து புகார் அளித்தும் இதுவரை போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications