ராமேஸ்வரம் கடலில் பரபரப்பு.. நாட்டு படகில் சிக்கிய 100 கிலோ கஞ்சா ஆயில்! விரட்டி பிடித்த அதிகாரிகள்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா ஆயிலை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் சென்ற நாட்டுப்படகை தடுத்து சோதனையிட்டு கஞ்சா ஆயிலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கும், ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கும் கடல் வழியாக தங்கம், போதைப்பொருள், கடல் அட்டைகள் கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இதனை கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையில் மத்திய வருவாய்த்துறை, சுங்கத்துறை, கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அடிக்கடி கைது செய்து தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு வாடி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா ஆயில் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது.
இதையடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட. மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடல்பகுதியில் மத்திய வருவாய்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையோடு இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மண்டபம் தெற்கு வாடி கடல் பகுதியிலிருந்து சந்தேகத்திற்கு இடமாக நாட்டு படகு சென்று கொண்டிருந்தது. நாட்டு படகை நிறுத்தும்படி கூறியும் வேகமாக சென்றது.
மேலும் நாட்டுப்படகில் இருந்த பார்சலை கடலில் வீசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த படகை மறித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது படகில் இருந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார். இதனால் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து நாட்டு படகு சோதனையிடப்பட்டது. அப்போது 100 கிலோ எடை கஞ்சா ஆயில் பதுக்கி எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அதில் பயணித்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா ஆயிலை இலங்கைக்கு கடத்தி செல்வதும், இந்த கடத்தலில் மேலும் 20 பேர் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்மந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் மத்திய வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
கடத்தலில் ஈடுபட்டபோது ஒரு பார்சலை தூக்கி வீசப்பட்டதாக கூறியதை அடுத்து கடலுக்குள் சென்று தேடக்கூடிய சிறப்பு பயிற்சி பெற்ற ஸ்குபா வீரர்கள் வரவழைக்கப்பட்டு கடலோர காவல்படை வீரர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications