மானாமதுரை: 108 வயது பாட்டி மரணம்: ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய அதிசயம்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தில் 108 வயது பாட்டி மரணமடைந்ததை தொடர்ந்து கிராமமே திரண்டு அஞ்சலி செலுத்தியது.
வேதியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த குலையப்பன்&முத்தம்மாள் தம்பதியினர். விவசாயிகளான கால்நடை வளர்ப்பதுதான் இவர்களின் குலத்தொழில்.
4ஆண்கள், 3 பெண்கள் என ஏழு பேர் கொண்டது இவர்கள் குடும்பம் அனைவருக்கும் திருமணம் முடிந்து 10 பேரன்கள், 13 பேத்திகள் பிறந்தனர்.
தற்போது இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து 23 கொள்ளுப்பேத்திகள், 27 கொள்ளுப் பேரன்கள் உள்ளனர். எல்லோருமே வேதியரேந்தலில்தான் வசிக்கின்றனர்.

108 வயதுவரை வாழ்ந்த இந்த முத்தம்மாள் பாட்டி, விவரம் தெரிந்த நாளில் இருந்து காலையில் கேப்பை கூழும் வெங்காயமும்தான் உணவாக சாப்பிடுகிறார் என்கின்றனர் அவரது வாரிசுகள். பெரும்பாலும் இரவு உணவை தனது தாயார் தவிர்த்து விடுவார் என்கின்றார் மகன் காளிமுத்து.
விவசாய வேலை
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து முதல் வேலையாக வயலுக்குத்தான் செல்வாராம், வேதியரேந்தலை ஒட்டி வைகையாறு செல்வதால் எந்நேரமும் தண்ணீர் வசதி உள்ள கிராமம், ஆற்றில் தண்ணீர் வந்தபடியே இருப்பதால் விவசாயம் செழிப்பாக இருந்துள்ளது, எனவே வசதிக்கு குறைவில்லாமல் இருந்துள்ளனர்.
கிராமத்து வைத்தியம்
உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கிராமத்து வைத்தியமே செய்வது வழக்கம். மற்றபடி எந்த ஆங்கில வைத்தியமும் பார்த்ததில்லை குலையப்பன்& முத்தம்மாள் தம்பதியினர்.
இவர்களுக்கு ராக்கு, சுப்பம்மாள், எழுவக்காள் என மூன்று பெண்களும், வேட்டையார், நடராசன், காளிமுத்து, குருசாமி என நான்கு மகன்களும் உள்ளனர். இதில் இருவர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் இயற்கையாக மரணமடைந்துள்ளனர்.
போட்டோ எடுக்காத பாட்டி
பிறந்தது முதலே போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்பதால் போட்டோவே எடுக்கவில்லை. தற்போது முதியோர் பென்சன் வாங்குவதற்கு மட்டும் போட்டோ எடுத்துள்ளனர். திருமணம் போன்ற விசேசங்களின் போதும் போட்டோவை தவிர்த்து விடுவாராம்.
தடுக்கி விழுந்து மரணம்
கடந்த பத்து நாட்களுக்கு முன் படியில் இறங்கும் போது தவறி விழுந்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு முதன் முதலாக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் இருக்க பிடிக்காமல் மறு நாளே வீட்டுக்கு கொண்டு போகச் சொல்லிவிட்டாராம், இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் மரணம் அடைந்துள்ளார்.
திருவிழா கோலம்
எனக்கு 75 வயது தனது தயாருக்கு 108 வயது இருக்கும் என்கிறார் அவரது மகன் காளிமுத்து. இப்பகுதியில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருந்ததில்லை என்றும் இவர் மட்டுமே 100 வயதை கடந்துள்ளவர் என்றும் போதிய ஆவணங்கள் இல்லாததால் அரசு ஆவணங்களில் பதிவு செய்ய முடியவில்லை என்றும் கிராமமக்கள் தெரிவித்தனர்.பாட்டி மரணமடைந்ததை அடுத்து கிராமத்தினர் மைக்செட் கட்டி பாட்டுப்பாடி பல்லாக்கு கட்டி முத்தம்மாளை அடக்கம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications