மின்சாரம் பாய்ந்து இறந்த 10ஆம் வகுப்பு மாணவன் 313 மதிப்பெண்களுடன் தேர்ச்சி! பெற்றோர் கண்ணீர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவன் தமிழ் துரை, இன்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இந்த சந்தோஷமான தருணத்தில் மகன் இல்லையே என பெற்றோர் கண்ணீர் விடுகிறார்கள்.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடந்தது. அதற்கு முன்பு பிப்ரவரி மாதமே செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியாகின. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய தமிழக அரசின் இணையதளங்களில் மாணவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மற்றும் மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பேர் மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் மாணவியர்களும், 272 சிறைவாசிகளும் தேர்வு எழுதினர்.
கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டு சதவீதம் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மயிலாடுதுறையில் மேலையூர் உத்திராபதியார் கோயில் திருவிழா நடந்தது.
அப்போது கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நடந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்கு இரும்பு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த மின்விளக்கில் மின் கசிவு ஏற்பட்டிருந்தது. அந்த மின்கசிவால் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த மாணவன் தமிழ் துரை பலியானார். இந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதாவது 313 மதிப்பெண்களை பெற்று தமிழில் 57 மதிப்பெண், ஆங்கிலத்தில் 84, கணக்கில் 47, அறிவியலில் 65, சமூக அறிவியலில் 60 மதிப்பெண்களை பெற்று 62 சதவீதம் பெற்றுள்ளார். தற்போது அவர் இல்லாத நிலையில் அவருடைய பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications