சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கு.. 15 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைதான பாமகவினர் 15 பேரையும் விடுதலை செய்து திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2006 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய வந்தவர்களை தடுக்க முயன்ற அதிமுக தொண்டர் முருகானந்தம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிவி சண்முகம் மீது கொலை முயற்சி
அதிமுக ராஜ்யசபா உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை தாக்கிக் கொல்ல முயற்சி செய்தது.
சி.வி. சண்முகம் உடனடியாக காருக்கு அடியில் புகுந்து உயிர் தப்பினார். ஆனால், சிவி சண்முகத்தை கொல்ல வந்தவர்களை தடுக்க முயன்ற அவரது உறவினரும், அதிமுக தொண்டருமான முருகானந்தம் கொல்லப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பாமகவை சேர்ந்த சீனிவாசன், கருணாநிதி, குமரவேல் பிரதீபன், ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
20 பேர் மீது குற்றச்சாட்டு
பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2011ல் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, 21.11.2014ல் திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாமகவைச் சார்ந்த 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதில் 5 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 15 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் 28ம் தேதி நிறைவடைந்தது.
அனைவரும் விடுதலை
இதனைத் தொடர்ந்து, ஜூன் 12 ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக் இன்று தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications