விழுப்புரம்: கோவில் திருவிழாவில் வெடி விபத்து - 2 பேர் பலி 50 பேர் காயம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நடந்த கோவில் திருவிழாவில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே பெருமானத்தம் கிராமத்தில் கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒருகட்டமாக நேற்றிரவு இரவு 10 மணியளவில் சாமி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வான வேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பிச்சன் என்பவர் பட்டாசுகளை மொத்தமாக சாக்குப் பையில் வைத்து, வெடிக்கச் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் இருந்த சாக்குப் பை மீது தீ பொறி விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பிச்சன் மற்றும் சப்பானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
மேலும், இந்த விபத்தில் 14 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் பயந்து போன மக்கள் சிதறி ஓடியதில், நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து கரியாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் நடந்த வெடிவிபத்தில் இரண்டு பேர் பலியானதால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியது.












Click it and Unblock the Notifications