சென்னை தாம்பரத்தில் வெள்ளத்தில் சிக்கிய 22 பேர் விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு!!
சென்னை: சென்னை தாம்பரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கி மொட்டைமாடிகளில் தத்தளித்த 22 பேர் விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கப்பட்டனர். மேலும் இப்பகுதியில் சிக்கியோரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வடமாவட்டங்களை வரலாறு காணாத வகையில் வெளுத்து வாங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாது அடைமழை கொட்டியது. தாம்பரம் அருகே வரதராஜபுரம் பகுதியில் 10 அடி உயரத்துக்கு வெள்ளநீர் தேங்கி உள்ளது.

இதனால் இப்பகுதி மக்களை படகுகளில் மீட்க முடியாமல் போனது. இதையடுத்து தாம்பரத்தில் உள்ள விமானப் படை ஹெலிகாப்டர்களின் உதவி கோரப்பட்டது.

இதைத் தொடர்ந்து மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்திருந்தோரில் முதலில் குழந்தைகள், பின்னர் பெண்கள் என மொத்தம் 22 பேர் அடுத்தடுத்து மீட்கப்பட்டு தாம்பரத்தில் தனியார் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர்.
Air Force rescue operations, Chennai. pic.twitter.com/yux90oKol2
— Vishnu Som (@VishnuNDTV) November 16, 2015 பெருங்களத்தூர் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் படகுகளில் சென்று மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கை விடிய விடிய நடைபெற்றது.
முடிச்சூரில் ராணுவம்
இதேபோல் தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ராஜ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த 50 வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications