திருச்செந்தூர் லாட்ஜில் அண்ணன், தங்கை தற்கொலை... கூட வந்த 3 பேர் மாயம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் லாட்ஜில் புதுச்சேரியைச் சேர்ந்த அண்ணன், தங்கை தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுடன் வந்த மூன்று பேர் கதி தெரியாததால் அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாண்டிசேரி எழில்நகர், லால்பேட்டை 6 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது தம்பி, 2 தங்கைகள், தங்கையின் மகள் ஆகிய 5 பேருடன் 9 ஆம் தேதி திருச்செந்தூர் வந்தார். கோயிலில் சாமி கும்பிட்ட அவர்கள் நாழிக்கிணறு பகுதியில் உள்ள கோயில் லாட்ஜில் அரை எடுத்து தங்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர்கள் அறையை காலி செய்ய வேண்டிய நிலையில் அறையில் இருந்து தூர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருச்செந்தூர் டிஎஸ்.பி கோபால், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மறறொரு சாவி மூலம் அறையை திறந்தனர்.
அப்போது சீனிவாசன் மற்றும் அவரது ஒரு தங்கை விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தனர். மற்ற 3 பேரையும் காணவில்லை. அங்கு இருந்த கடிதத்தில், "நானும்,தங்கையும் விஷம் குடித்துள்ளோம். மற்ற 3 பேரும் தற்கொலை செய்ய வெளியே சென்றுள்ளனர். எனது பேக்கில் ரூபாய் 5 ஆயிரம் உள்ளது. இதை வைத்து எங்களது இறுதி சடங்கை செய்யவும்" என எழுதப்பட்டிருந்தது.
தூத்துக்குடி எஸ்.பி அஸ்வின் கோட்னீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தினார். காணாமல் போன மூன்று பேரும் கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கலாமோ என அச்சம் நிலவியதால் போலீசார் கடற்கரைக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஓருவேளை மனம் மாறி புதுச்சேரிக்கு சென்றிருக்கலாம் என கருதி ஆறுமுகநேரி போலீசார் லாட்ஜில் அவர்கள் கொடுத்து முகவரிக்கு தேடி சென்றிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications