இன்ஸ்டாகிராம் மோகம்... செல்ஃபியால் சோகம்! செங்கல்பட்டில் ரயில்மோதி 3 இளைஞர்கள் பலி
செங்கல்பட்டு: இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் அமர்ந்து செல்பி வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்த 3 இளைஞர்கள் விரைவு ரயில் மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
செங்கல்பட்டை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்குமார்(24), பிரகாஷ்(17), மோகன் (17). நண்பர்களான இவர்கள் மூவரும் எப்போதும் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து செல்பி வீடியோக்களை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வழக்கமாக வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் மாலை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் இருப்புப் பாதையில் 3 பேரும் அமர்ந்து வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய விரைவு ரயில் 3 பேரும் மீதும் மோதியது.
இதில் படுகாயமடைந்த பிரகாஷ், மோகன், அசோக்குமார் ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே இருப்புப் பாதை போலீசார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications